சேலம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 65 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

7th Sep 2019 09:52 AM

ADVERTISEMENT

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெள்ளிக்கிழமை நொடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
கர்நாடக  மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை  தீவிரமடைந்துள்ளதால்,  கபினி,  கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு  நீர்வரத்து  மேலும்  அதிகரித்து வருகிறது.  இதையடுத்து,  அணைகளின் பாதுகாப்புக் கருதி உபரி நீர் காவிரியில் திறக்கப்படுகிறது.  இதனால் காவிரியில்  3 வாரங்களுக்கு பிறகு மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில்,   வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து  நொடிக்கு 35 ஆயிரம் கன அடியாக இருந்தது.  நண்பகல் 12 மணிக்கு நீர்வரத்து 50 ஆயிரம் கன அடியாகவும், மாலை 4 மணிக்கு  65 ஆயிரம் கன அடியாகவும்  அதிகரித்துள்ளது.  கர்நாடக அணைகளின் நீர்வரத்து காரணமாக வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.59 அடியாக உயர்ந்தது.  இதையடுத்து,  அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு  திறக்கப்படும் நீரின் அளவு மாலை 5.30 மணிக்கு நொடிக்கு 18 ஆயிரம் கன அடியிலிருந்து  25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. 
       அணையிலிருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  அணையின் நீர் இருப்பு 89.67 டி.எம்.சி.யாக இருந்தது.  அணைக்கு வரும் நீரின் அளவும் பாசனத்துக்கு திறக்கப்படும்  நீரின் அளவும் இதே நிலையில் இருந்தால், நடப்பு ஆண்டில் முதல்முறையாக மேட்டூர் அணை இன்று (சனிக்கிழமை) நிரம்பும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT