சேலம்

பெரியார் பல்கலை.யில் விலக்கிக் கொள்ளப்படாத பணி நியமன ஆட்சேபணைகள்! தணிக்கை அறிக்கையில் தகவல்

7th Sep 2019 09:51 AM

ADVERTISEMENT

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உறுப்புக் கல்லூரி முதல்வர்கள் நியமனம் முதல் உதவிப் பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்பியதில் உள்ள ஆட்சேபணைகள் விலக்கிக் கொள்ளப்படாமல் இருப்பது, உள்ளாட்சி நிதி தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆட்சிப் பேரவை (செனட்) கூட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.  இக் கூட்டத்தில் 2016 - 17 ஆம் ஆண்டின் உள்ளாட்சி நிதி தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டது. 
சுமார் 171 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளான எடப்பாடி,  பென்னாகரம்,  அரூர், பாப்பிரெட்டிபட்டி ஆகிய கல்லூரி முதல்வர்கள், உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிட  நியமனங்களில் உள்ள ஆட்சேபணைகள் பல ஆண்டுகளாக விலக்கி கொள்ளப்படாமல் இருப்பது குறித்து மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியர்கள், இணை மற்றும் உதவிப் பேராசிரியர்களான எம்.சுகுணா,  எம்.பச்சமுத்து,  எஸ்.பரமேஸ்வரி,  டி.இளங்கோவன்,  ஆர்.தங்கப்பன்,  எம்.லதா,  எம்.பிரதிபா, எம்.தீபா,  ஆர்.அறிவுச்சுடர் மற்றும் உறுப்புக் கல்லூரி முதல்வர்கள்  ஜி.வெங்கடேசன் (அரூர்),  பி.கார்த்திகேயன் (பாப்பிரெட்டிபட்டி), கே.செல்வவிநாயகம்  (பென்னாகரம்) ஆகியோரின் கல்விச் சான்றிதழ்களின் உண்மை தன்மை அறிய தணிக்கை துறையில் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. 
ஆனால், இதுவரை அவர்களின் கல்விச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-16 ஆம் ஆண்டின் உள்ளாட்சி நிதி தணிக்கையின் போது இந்த ஆட்சேபணை சுட்டிக்காட்டப்பட்டது.
ஆனால்,  ஆட்சேபணைகள் விலக்கு அளிக்கப்படாமல் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான தணிக்கை அறிக்கையில் இடம் பெற்று வருகிறது.
அதேபோல,  பெரியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான மேட்டூர் கல்லூரியின் முதல்வராக உள்ள கே.மருதமுத்து பணி நியமனத்தில், பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும்,  2015-16  மற்றும் 2016-17 இல் தொடர்ந்து அவரது ஆட்சேபணைகள் விலக்கி கொள்ளப்படாமல் உள்ளதாக,  உள்ளாட்சி நிதி தணிக்கை தெரிவித்துள்ளது.
குறிப்பாக,  பெரியார் பல்கலைக்கழக மேலாண்மைத் துறையில் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்ட எம்.சூர்யகுமார்,  குறைந்த கால அளவில் பிஎச்.டி. ஆய்வுப் படிப்பை முடித்துள்ளதாக தணிக்கை அறிக்கையில் ஆட்சேபணை விலக்கிக் கொள்ளப்படாமல் உள்ளது.  மேலும் உதவிப் பேராசிரியராகப் பணிக்கு சேர்ந்த அவரிடம் இருந்து ரூ.11.61 லட்சம் ரொக்கத்தைத் திரும்ப பெறுமாறு,  உள்ளாட்சி நிதி தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும்,  இளநிலை உதவியாளர், கண்காணிப்பாளர், எழுத்தர் ஆகிய ஆசிரியர் பணி அல்லாத காலிப் பணியிடங்களை நிரப்பியதிலும் ஆட்சேபணைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொ.குழந்தைவேல் கூறுகையில்,  உள்ளாட்சி நிதி தணிக்கை அறிக்கை ஆட்சேபணை இருக்கிறவர்களிடம் உண்மை தன்மை சான்றிதழ்களை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம்.  குறிப்பிட்ட நபர்களிடம் இருந்து பெறப்பட்டு தணிக்கைக்கு அனுப்புவோம்.  அதேபோல பணி நியமனம் சார்ந்த ஆட்சேபணை குறித்து அரசிடம் இருந்து போதிய உத்தரவு பெற்றோ அல்லது பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தின் மூலமோ மறுசீராய்வுக்கு உட்படுத்தப்பட்டு தீர்வு காணப்படும் என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT