சேலம்

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை:  ஆட்டோ ஓட்டுநருக்கு 27 ஆண்டுகள் சிறை: சேலம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

7th Sep 2019 09:52 AM

ADVERTISEMENT

சேலத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில்,  ஆட்டோ ஓட்டுநருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சேலம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சேலம்  பட்டை கோயில் பகுதியைச் சேர்ந்தவர் இப்ராஹிம் (27).  ஆட்டோ  ஓட்டுநரான இவர், கடந்த 2012-ஆம் ஆண்டு பள்ளிக்கு மாணவிகளை ஆட்டோவில் ஏற்றிச் செல்லும் போது,  அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.  அந்த மாணவி பிளஸ் 2 படித்து வந்தார் எனத் தெரிகிறது.
இதனிடையே, இப்ராஹிம் அந்த மாணவியுடன் நெருக்கமாகப் பழகி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  
ஆனால், இப்ராஹிம் அந்த மாணவியைத் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதனிடையே, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மாணவி அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து,  இப்ராஹிமை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸார் கைது செய்தனர்.  
இந்த வழக்கு விசாரணை சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முருகானந்தம், கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும்,  ரூ.10 ஆயிரம் அபராதம்,  விருப்பம் இல்லாத பெண்ணைக் கற்பழித்த குற்றத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரமும்,  போக்ஸோ சட்டப் பிரிவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.50 ஆயிரம் என மொத்தம்  27 ஆண்டுகள் சிறை தண்டனையும்,   ரூ.80 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனிடையே அபராதத் தொகையை கட்டத் தவறினால் 15 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டது.
கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணையின்போது இப்ராஹிம், தன் மீது புகார் கூறிய மாணவியுடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வருவதாக நீதிபதியிடம் தெரிவித்தார். 
இதைக்கேட்ட  நீதிபதி முருகானந்தம், இப்ராஹிம் கூறுவது உண்மையா என போலீஸாரிடம் கேட்டார். அப்போது, காவல் துறையினர், இப்ராஹிம் பொய் சொல்கிறார்  என்று ஆதாரத்துடன் விளக்கினர்.  இந்த வழக்கில் அரசு வழக்குரைஞராக தனசேகரன் ஆஜரானார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT