சேலம்

தம்மம்பட்டியில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம்: 450  போலீஸார் பாதுகாப்பு

7th Sep 2019 09:48 AM

ADVERTISEMENT

தம்மம்பட்டியில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் 450 போலீஸார்  பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேலம்  மாவட்டம்,  தம்மம்பட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 42 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இச்சிலைகளுக்குத் தொடர்ந்து 5 நாள்கள் காலை, மாலை வேளைகளில் பூஜைகள் நடைபெற்றன. 
இந்த ஆண்டு,  40 விநாயகர் சிலைகளின் விசர்ஜன ஊர்வலம் தம்மம்பட்டி உடையார்பாளையம் பகுதியிலிருந்து காலை 11 மணிக்கு தொடங்கியது. ஊர்வலம் பிற்பகல் தம்மம்பட்டி பேருந்து நிலையத்தை  வந்தடைந்தது. 
அங்கு இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சேலம் கோட்டத் தலைவர் சந்தோஷ்குமார், திருப்பூர்  மேற்கு மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர்  பேசினர்.  
அதனைத்தொடர்ந்து  ஊர்வலம் கடைவீதி, நடுவீதி வழியாக துறையூர் பிரதான சாலையில் உள்ள தண்ணீர்ப்பந்தல் பகுதியை  மாலை 4.30 மணிக்கு    அடைந்தது. அங்கிருந்து செந்தாரப்பட்டிக்குச் செல்லும் வழியில் இரட்டைக்குட்டை  கல்குவாரியில் விநாயகர் சிலைகள் வாகனங்களிலிருந்து இறக்கி வைக்கப்பட்டு   சிறப்பு பூஜை நடைபெற்றது.  பின்னர் ஒவ்வொரு சிலைகளாக , கல்குவாரி நீர்த்தேக்கத்தில்  கரைக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு அனைத்து சிலைகளும் நீரில் கரைக்கப்பட்டன.
ஊர்வல பாதுகாப்பு ஏற்பாடுகளை சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் பிரமோத்குமார்  மேற்பார்வையிட்டார்.  மேலும், ஊர்வலத்தில் சேலம் எஸ்.பி.தீபா கனிக்கர்,  கூடுதல் எஸ்.பி.அன்பு, டி.எஸ்.பிக்கள் ஆத்தூர் ராஜு உள்பட 4 பேர், தம்மம்பட்டி ஆய்வாளர் (பொ) சுப்பிரமணியம் உள்பட  13 ஆய்வாளர்கள், 30 உதவி ஆய்வாளர்கள், ஊர்க்காவல் படையினர்  என மொத்தம் 450 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும், ஊர்வலத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆத்தூர் வருவாய்க் கோட்டாட்சியர் துரை, கெங்கவல்லி வட்டாட்சியர் சிவக்கொழுந்து, வருவாய் ஆய்வாளர் தமிழ்செல்வி உள்ளிட்ட வருவாய்த்துறையினர்  செய்திருந்தனர்.
முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு வாகனம், கூட்டத்தை கலைக்க உதவும் வஜ்ரா வாகனங்களும் தயார் நிலையில் இருந்தன. விநாயகர் சிலைகள் கரைக்கும் பகுதிகளில்,ஒரு
மணி நேரம் மழை பெய்தது. தம்மம்பட்டியில் விநாயகர் சிலைகளின் விசர்ஜன ஊர்வலம் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மொத்தம் 6 மணி நேரம் நடைபெற்றது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT