சேலம்

கல்லூரி மாணவரை கொலை செய்ததாக இருவர் கைது

7th Sep 2019 09:46 AM

ADVERTISEMENT

சேலம் அருகே கல்லூரி மாணவரை கொலை செய்ததாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் திலீப்குமார் (19). இவர் ராசிபுரம் பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். 
இதனிடையே  வியாழக்கிழமை இரவு திலீப் தனது உறவினர் சரண்குமாருடன்  வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த 3 பேர்,  இருவரையும் ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பி
ஓடிவிட்டனர். 
இதில் திலீப்குமார்  நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சரண்குமாரை  சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தகவல்  அறிந்து மல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் திலீப்குமார் அதே பகுதியில் கோஷ்டியாக செயல்பட்டு வந்த திருநாவுக்கரசு  உள்ளிட்டோருடன் பழகி வந்துள்ளார். திருநாவுக்கரசு மீது அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதனிடையே திலீப்குமார் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திலீப்குமார் தனியாகவும், திருநாவுக்கரசு தரப்பினர் தனியாகவும் சிலைகளை வைத்து வழிபட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து புதன்கிழமை விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்வின்போதும் இருவருக்கும் இடையே தகராறு
ஏற்பட்டுள்ளது. 
அதன்பிறகு வியாழக்கிழமை காலை ரௌடி கும்பலைச் சேர்ந்த திருநாவுக்கரசு,  திலீப்குமாரின் வீட்டுக்கு சென்று கொலை செய்துவிடுவதாகவும், கட்செவி அஞ்சலில் மிரட்டியதாகவும்  கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் திலீப்குமார் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் சரவணன்,  திருநாவுக்கரசு,  சூர்யா ஆகியோர் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் தலைமறைவாக இருந்த மூவரையும்  தேடி வந்தனர். இதற்கிடையில் கொலையாளிகளை கைது செய்யக்கோரி திலீப்குமாரின்  உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை கூடம் பகுதியில் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை போலீஸார் சமரசம் செய்தனர். இதனால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே கொலை வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசு, சரவணன் ஆகியோரை மல்லூர் போலீஸார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சூர்யாவை தேடிவருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT