சிவப்பு கம்பளிப் புழுவைக் கட்டுப்படுத்துவது எப்படி? வேளாண் உதவி இயக்குநர் தகவல்

சங்ககிரி வட்டம், மகுடஞ்சாவடி வட்டாரத்தில் உள்ள ஏகாபுரம், தப்பக்குட்டை கிராமப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை சாகுபடியில் தென்படும் சிவப்பு கம்பளிப் புழுவினை
சிவப்பு கம்பளிப் புழுவைக் கட்டுப்படுத்துவது எப்படி? வேளாண் உதவி இயக்குநர் தகவல்

சங்ககிரி வட்டம், மகுடஞ்சாவடி வட்டாரத்தில் உள்ள ஏகாபுரம், தப்பக்குட்டை கிராமப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை சாகுபடியில் தென்படும் சிவப்பு கம்பளிப் புழுவினை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து மகுடஞ்சாவடி உதவி வேளாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
 மகுடஞ்சாவடி வட்டார வேளாண் உதவி இயக்குநர் வி. மணிமேகலாதேவி வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில் கூறியுள்ளது:
 நடப்பு பருவத்தில் மகுடஞ்சாவடி வட்டாரத்தில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்புக்கும் கூடுதலாக நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஏகாபுரம் மற்றும் தப்பக்குட்டை கிராமங்களில் சிவப்பு கம்பளிப் புழு பாதிப்பு தென்படுகிறது.
 சிவப்பு கம்பளிப் புழுவின் தாய் அந்துப்பூச்சியானது பருவமழைக் காலங்களில் மண்ணில் இருந்து வெளிப்படுகிறது. ஒரு தாய் அந்துப்பூச்சியானது 600 முதல் 700 வரையிலானமுட்டைகளை இடும் தன்மைகொண்டது. முட்டைகள் இரண்டு முதல் மூன்று நாள்களில் பொறித்து இளம்புழுக்கள் உண்டாகும். இதில் வளர்ந்த லார்வாக்கள் சிவப்பு மற்றும் பழுப்பு நிறத்துடன் கருப்புநிற கோடுகளுடன் காணப்படும். லார்வா பருவமானது 40 முதல் 50 நாள்கள் வரை நீடிக்கும்.
 ஆரம்பக்கட்ட வளர்ச்சிப் பருவத்தில் உள்ள புழுக்கள் இலைகளைஅதிகளவில் உண்டு சேதத்தை உருவாக்கும். வளர்ந்த புழுக்கள்மொத்தமாக இழைகள், பூ, மற்றும் வளர் குருத்துகளை உண்டு பயிரினை முழுவதுமாக நாசம் செய்யும் தன்மைகொண்டது. கடுமையாக பாதிக்கப்பட்ட வயலானது கால்நடைகள் மேய்ந்தது போன்று காணப்படும்.
 கட்டுப்படுத்தும் முறைகள்: கோடை உழவின் மூலம் கூட்டுப் புழுக்களை தரைக்கு மேலே கொண்டு வந்து அழிக்கலாம். முட்டைக் குவியல் மற்றும் அதிகமாக சேதம் விளைவிக்கும் ஆரம்பக்கட்டம் மற்றும் வளர்ச்சிப் பருவத்தில் உள்ள லார்வாக்களை கையால் பொறுக்கி அழிக்கலாம்.
 மாலை நேரத்தில் சொக்கப்பனைகளை கொளுத்தி தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். விளக்குப் பொறியினை மாலை முதல் இரவு 11 மணி வரை வயலில் ஒரு ஏக்கருக்கு 5 என்ற அளவில் வைப்பதன் மூலம் தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். வயலினை சுற்றி 1 அடி ஆழம் மற்றும் 1 அடி அகலத்தில் குழி எடுப்பதன் மூலம் ஊர்ந்து செல்லும் லார்வாக்களை கட்டுப்படுத்தலாம்.
 ஒரு ஹெக்டேருக்கு பாசலோன் 35 இ.சி. மருந்தினை 750 மி.லி. என்ற அளவிலோஅல்லது டைகுளோர்வாஸ் 76 இ.சி. மருந்தினை 650 மி.லி. என்ற அளவில் 400 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து சிவப்பு கம்பளிப் புழுவினை கட்டுப்படுத்தலாம். மேற்கண்ட தொழில்நுட்பங்களை விவசாயிகள் கடைபிடித்து நிலக்கடலை பயிரினை சிவப்பு கம்பளிப் புழு தாக்குதலிருந்து பாதுகாக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com