சேலம்

தம்மம்பட்டியில் கடந்த பத்து வருடங்களாக இயக்கப்பட்ட வேலூர் அரசுப் பேருந்து நிறுத்தம்: பயணிகள் அவதி

4th Sep 2019 09:51 AM

ADVERTISEMENT

திருச்சி உப்பிலியாபுரம் அரசு பணிமனையிலிருந்து தம்மம்பட்டி வழியாக வேலூருக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்து அண்மையில் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டது.
 கடந்த பத்து வருடங்களாக இயக்கப்பட்ட இப் பேருந்தின் வசதியால் தம்மம்பட்டியிலிருந்து திருவண்ணாமலை செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைத்துத் தரப்பினரும் பயன்பெற்று வந்தனர்.
 திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், உப்பிலியாபுரம் அரசு பணிமனையிலிருந்து கடந்த பத்து வருடங்களுக்கு முன் ஒரு அரசுப் பேருந்து வேலூருக்கு இயக்கப்பட்டது.
 அந்தப் பேருந்து துறையூரில் காலை 6.30 மணிக்குப் புறப்பட்டு, தம்மம்பட்டிக்கு காலை 7.30 மணிக்கு வந்தடையும்.
 இந்தப் பேருந்து காலை 7.45 மணிக்கு தம்மம்பட்டியிலிருந்து புறப்பட்டு, கெங்கவல்லி, ஆத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை வழியாக வேலூரை மதியம் 2 மணிக்குச் சென்றடையும்.
 அங்கிருந்து மீண்டும் 3 மணிக்கு புறப்பட்டு, அதே வழித்தடத்தில் தம்மம்பட்டிக்கு இரவு 10 மணிக்கு வந்து சேரும். பின்னர் இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு துறையூர் சென்று பின்னர், உப்பிலியாபுரம் அரசு பணிமனையில் 11.30-க்குச் சென்றடைந்து நின்றுவிடும்.
 இப் பேருந்து வேலூர், திருவண்ணாமலை சென்று படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கும் பெரும் உதவியாக இருந்துவந்தது. கடந்த பத்து வருடங்களாக தம்மம்பட்டியிலிருந்து இரவில் திருச்சி செல்ல இந்தப் பேருந்து உதவியாக இருந்தது.
 இப் பேருந்து ஜூலை மாதத்தில் தொடர்ந்து பத்து நாள்கள் இயக்கப்படவில்லை. இதனால் வேலூர் வரை செல்லும் பயணிகளும், இரவு நேரத்தில் திருச்சி செல்வோரும் அவதிக்குள்ளாகினர்.
 இந் நிலையில் கடந்த இருநாள்களாக வேலூர் பேருந்து நிறுத்தப்பட்டதால், வேலூர் மார்க்கத்தில் சென்றுவந்த பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
 பலருக்கு பேருந்து நிறுத்தப்பட்ட விவரம் தெரியாததால், சொந்த பணத்தில் தம்மம்பட்டியிலிருந்து தனி வாகனங்களில் துறையூர் சென்றனர்.
 தம்மம்பட்டி பகுதி மக்கள் கூறியது: தம்மம்பட்டியிலிருந்து இயக்கப்பட்ட நீண்ட தூர பேருந்துகளில் வேலூர் பேருந்தும் ஒன்று. இப் பேருந்தை உப்பிலியாபுரம் கிளை அரசுப் போக்குவரத்துப் பணிமனை அதிகாரிகள், மீண்டும் இயக்கிட வேண்டும் என்றனர்.
 2009-ஆம் ஆண்டில் அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேருவிடம் பல முறை கோரிக்கைகளை வைத்து , இயக்கி வைத்து, அந்தப் பேருந்தை தம்மம்பட்டியில் வேலூருக்குத் தொடங்கி வைத்த முன்னாள் எம்.எல்.ஏ.வும், தம்மம்பட்டி அருகே கூடமலையைச் சேர்ந்த கு. சின்னதுரை கூறியது:
 தமிழக அரசு வேலூர் பேருந்தை மீண்டும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால் அனைத்து தரப்பு மக்களும் தொடர்ந்து பயன்பெறுவர் என்றார் அவர்.
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT