சேலம்

சட்ட விழிப்புணர்வு முகாம்

4th Sep 2019 09:52 AM

ADVERTISEMENT

தாரமங்கலம் ஒன்றியம் சின்னப்பம்பட்டி கிராமத்தில் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்ட விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 கஸ்துரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியில் சமூக நலத்துறை மற்றும் புனித ஜான் சமூக சேவை ட்ரஸ்ட் இணைந்து பெண் குழந்தைகள் பாதுகாத்து கொள்வது குறித்த சட்ட விழிப்புணர்வு முகாமை நடத்தியது.
 இந்த முகாமில், சேலம் நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி குணவதி கலந்துகொண்டு பள்ளி மாணவியரிடம் பேசியது:
 தவறான நோக்கத்துடன் தவறான வார்த்தைகளைக் கொண்டு பேசும் ஆண்கள் குறித்து பெற்றோர் அல்லது ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும். பள்ளி மற்றும் இதர இடங்களில் தனக்கு நேரும் அனுபவங்களை பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும். தொடர்ந்தோ அல்லது நேரடியாகவோ தன்னை உடல் ரீதியாக துன்புறுத்தும் போது, பயப்படாமல் அவர்களை மிரட்ட வேண்டும். தொல்லைகள் தொடந்தால் காவல் துறையில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 மத்திய, மாநில அரசுகள் பெண் குழந்தைகளை பாதுகாக்க முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. மேலும், 100 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு தனக்கு நேரும் பாதிப்புகள், கொடுமைகள் குறித்து புகார் செய்யலாம். இந்த புகார்கள் மீது காவல் துறை துரிதமாக செயல்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றார்.
 இதனைத் தொடர்ந்து, மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் கார்த்திகா பேசும் போது, சமுகத்தில் பெண் குழந்தைகள் பாலியல் தாக்குதலிருந்து எப்படி தங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளித்தார்.
 தாரமங்கலம் வட்டாரத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்துகொண்ட இந்த முகாமில், காவல் துறை, குழந்தைகள் திட்டம், வழக்குரைஞர்கள், பள்ளிக் கல்வித் துறை, மகளிர் குழுவினர், பெண்கள் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாணவியர் பாதுகாப்பு குறித்து பேசினர்.
 
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT