சேலம்

இருசக்கர வாகனம் விபத்து: வழிப்பறிக் கொள்ளையர்களின் கை முறிவு

4th Sep 2019 09:26 AM

ADVERTISEMENT

இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தவறி கீழே விழுந்ததில், வழிப்பறிக் கொள்ளையர்களின் கைகள் முறிந்தன.
 சேலம் ஜான்சன்பேட்டை மேற்கு தெருவைச் சேர்ந்த சரவணன் (22), அதே பகுதியில் கிழக்குத் தெருவைச் சேர்ந்த பிரசாந்த் (22) இருவரும் திங்கள்கிழமை வீராணம் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததில் சரவணனின் இடது கை மணிக்கட்டில் அடிபட்டது. பிரசாந்தின் இடது முழங்கை முறிந்தது. இதைத் தொடர்ந்து, இவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
 இதுகுறித்து வீராணம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், விபத்தில் சிக்கிய இருவரும் வழிப்பறிக் கொள்ளையர்கள் என்பதும், இவர்கள் மீது செவ்வாய்ப்பேட்டை, அம்மாப்பேட்டை மற்றும் வீராணம் காவல் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
 இந்நிலையில், கடந்த ஆக. 20-ஆம் தேதி அம்மாப்பேட்டை கொய்யாதோப்பு பாலமுருகன் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் (34), நூல் மில்லில் வேலை முடிந்து இரவு மிதிவண்டியில் வீட்டுக்கு சென்ற போது, சரவணன் மற்றும் பிரசாந்த், அவரை கத்தியால் தாக்கி அவரிடமிருந்த செல்லிடப்பேசியை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிந்த அம்மாப்பேட்டை போலீஸார் இருவரையும் தேடி வந்த நிலையில், சரவணன் மற்றும் பிரசாந்த் திங்கள்கிழமை விபத்தில் சிக்கி காயமடைந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT