சேலம்

"அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் போலீஸில் பிடித்து ஒப்படைக்கப்படும்'

4th Sep 2019 09:48 AM

ADVERTISEMENT

அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் போலீஸில் பிடித்து ஒப்படைக்கப்படும் என சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த லாரி உரிமையாளர் சங்கச் செயலாளர் கண்ணையன் தெரிவித்தார்.
 சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்க செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
 சங்கத்தின் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். செயலாளர் கண்ணையன் முன்னிலை வகித்தார். பொருளாளர் முருகேசன் வரவேற்றார். துணைத் தலைவர் சந்திரன், துணைச் செயலாளர் பழனிசாமி உட்பட மணல் லாரி உரிமையாளர்கள், எம்சாண்ட் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
 இதுகுறித்து, மணல் லாரி உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் கண்ணையன் கூறியதாவது:
 கடந்த 2014 முதல் 2017 ஆம் ஆண்டு வரை ஒரு யூனிட் மணல் ரூ. 5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. மணல் கடத்தல் சம்பந்தமாக ஏராளமான பொது நல வழக்குகள் போடப்பட்டதால் காவிரி படுகையில் மணல் குவாரிகள் குறைந்துள்ளன.
 இதன் காரணமாக மணலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்று ஒரு யூனிட் மணல் ரூ. 14 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
 தமிழக அரசு காவிரி ஆற்றுப் படுகைகளில் மணல் அள்ளுவதற்காக நீதிமன்றத்தில் போடப்பட்ட பொது நல வழக்குகளை உடனடியாக விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 ஆற்றுப்படுகைகளில் அதிகமான மணல் குவாரிகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந் நிலையில் எம்சாண்ட் தரமாகவும் விலை குறைவாகவும் கிடைக்க மணல் லாரி உரிமையாளர்களின் உரிமையாளர்களும் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதன்படி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஆறு சக்கரம் கொண்ட வாகனங்களில் இரு யூனிட் மணலும் 10 சக்கரம் கொண்ட வாகனங்களில் 3 யூனிட் மணலும் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் எம்-சாண்ட், பி-சாண்ட் ஏற்றி வந்தால் அந்த லாரியை மணல் லாரி உரிமையாளர்கள் பிடித்து போலீஸில் ஒப்படைக்கலாம். எம்-சாண்ட் ஒரு யூனிட் ரூ.4,000-க்கும், பிசாண்ட் ரூ.4,750-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 இந்த விலையில் இருந்து லாரி உரிமையாளர்கள் அவர்கள் வாடகை மற்றும் டீசல் அளவிற்கு ஏற்ப கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொள்ளலாம் என்றார்.
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT