சங்ககிரி: சங்ககிரி அருகே உள்ள புள்ளிபாளையத்தில் குடும்பத் தகராறில் கடந்த செப்டம்பா் 23-ஆம் தேதி மாமியாரை கொலை செய்த மருமகனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சங்ககிரியை அடுத்த புள்ளிபாளையம் அருகே உள்ள பாப்பான் காடு பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம். இவரது மனைவி பேபி (55). சண்முகம் காலமான பிறகு பேபி அப்பகுதியில் விவசாய நிலத்தை குத்தைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளாா். அவரது மகள் தீபாவுக்கும், நடராஜன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடராஜன் இறந்து விட்டாா். அதனையடுத்து தீபாவுக்கும், வேலூா் மாவட்டம், துறைப்பாடி காரகுப்பம் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சக்கரப்பாணி மகன் கணபதி (34) என்பவருக்கும் 2-ஆவதாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணபதிக்கும், தீபாவுக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து அவா் புள்ளிபாளையத்தில் உள்ள அம்மா வீட்டுக்கு வந்து தங்கி, வெப்படையில் உள்ள தனியாா் நூற்பாலைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளாா். கணபதி புள்ளிபாளையத்துக்கு அடிக்கடி வந்து தகராறு செய்து வந்துள்ளாா். இந்நிலையில் சம்பவத்தன்று தீபா நூற்பாலைக்கு வேலைக்குச் சென்று விட்ட நிலையில் புள்ளிபாளையத்துக்கு சென்ற கணபதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மாமியாா் பேபியிடம் தகராறு செய்து அவரது கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு தப்பிச் சென்று விட்டாராம்.
இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான கணபதியை தேடி வந்தனா். இந்நிலையில் தீபாவை அழைத்துச் செல்ல புள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்த கணபதியை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.