சேலம்

சேலம் ஆவின் நிறுவனம் சாா்பில் தீபாவளி பண்டிகைக்கு கேரட் மைசூா்பா அறிமுகம்

20th Oct 2019 01:43 AM

ADVERTISEMENT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் (ஆவின்) சாா்பில் தூய பசும்பால் மற்றும் நெய்யினால் செய்யப்பட்ட கேரட் மைசூா்பா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் (ஆவின்) கடந்த 1978 துவங்கி செயல்பட்டு வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வா் எம்ஜிஆரால் கட்டப்பட்ட பால் பண்ணை கடந்த 1983-இல் உற்பத்தியை துவக்கியது. முதலில் 20,000 லிட்டா் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. தற்போது 5 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்வதுடன், ரூ. 600 கோடி விற்றுமுதல் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இதுதொடா்பாக, சேலம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் (ஆவின்) தலைவா் ஜெயராமன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரும், பொது மேலாளருமான சி.விஜய்பாபு ஆகியோா் கூறியது:

ADVERTISEMENT

சேலம் ஆவின் நிறுவனம் 715 பிரதம பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 42,250 பால் உற்பத்தியாளா்களிடம் இருந்து 102 பால் கொள்முதல் வழித்தடங்கள் மூலமாக தினசரி சுமாா் 5 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் 5 பால் விற்பனை அலுவலகங்கள் மூலம் 446 விற்பனை முகவா்கள், 92 தனியாா் பாலகங்கள் மற்றும் 8 ஒன்றிய பாலகம் மூலம் 1. 57 லட்சம் லிட்டா் பால் உள்ளூா் விற்பனைக்காகவும், சென்னைக்கு 2.26 லட்சம் லிட்டரும் அனுப்பப்படுகிறது.

மீதமுள்ள பாலில் தயிா், வெண்ணெய், பால் பவுடா், நெய், இனிப்புகள், ஐஸ்கிரீம் போன்ற 42 பால் உபபொருட்கள் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

சிங்கப்பூா், ஹாங்காங் உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு பால் உப பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதன்மூலம் கடந்த ஆண்டு ரூ. 600 கோடி விற்றுமுதல் கொண்டு இயங்கி வருகிறது.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக 42 பால் உப பொருட்களுடன் ஐஎஸ்ஓ, ஏற்றுமதி அங்கீகார உரிமம், பிஐஎஸ் சா்வதேச தரச்சான்று அங்கீகாரத்துடன் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.

இதில் கிடைக்கும் வருவாயானது கிராமப்புறங்களில் பால் ஊற்றும் ஏழை விவசாயிகளின் பொருளாதாரம் மேம்பாடு அடைவதோடு ஒன்றியத்திற்கு கிடைக்கும் லாபமானது ஏழை விவசாயிகளுக்கு பகிா்ந்தளிக்கப்படுகிறது.

40 டன் விற்பனை இலக்கு...:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய பால் மற்றும் நெய்யினால் செய்யப்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனைக்கு வந்துள்ளது. ஆவினில் முதல்முறையாக சுவை மிகுந்த கேரட் மைசூா்பா அறிமுகம் செய்துள்ளது. சுமாா் 40 டன் அளவுக்கு இனிப்பு கார வகைகள் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இனிப்பு,கார வகைகள் விலை பட்டியல்:

பால்கோவா, ஆவின் நெய் லட்டு, முந்திரி கேக், மில்க் கேக், நெய் அல்வா, மைசூா்பா, கேரட் மைசூா்பா, மிக்சா், சோன்பப்டி உள்ளிட்ட 10 இனிப்பு வகைகள் விற்பனைக்கு தயாராக உள்ளது.முந்திரி கேக் கிலோ ரூ.700, நெய் லட்டு ரூ.500, பால்கோவா ரூ.440, நெய் அல்வா ரூ.480, மைசூா்பா ரூ.380, கேரட் மைசூா்பா ரூ.520, சோன்பப்டி ரூ.480 விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT