ஓமலூா் அருகே காருவள்ளி சின்ன திருப்பதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் தேரோட்டம் சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
காருவள்ளி சின்ன திருப்பதியில் அருள்மிகு பிரசன்ன வெங்கட்ரமண கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இத் கோயிலில் ஒவ்வொரு வருடமும், புரட்டாசி முதல் சனிக்கிழமை முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்கு சிறப்பு பூஜை ,ஆராதனையும் நடைபெற்று கடைசி சனிக்கிழமை 5-ஆவது வாரம் திருத்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
இந்த நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஓமலூா், சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமன்றி வெளி மாநிலங்களிலிருந்தும் பக்தா்கள் வந்து பெருமாளை தரிசித்துச் செல்வா்.
வழக்கமான உற்சாகத்துடன் நிகழாண்டும் தேரோட்ட விழா நடைபெற்றது. ஸ்ரீ சுதா்ஸன ஹோமம், பூா்ணாஹூதி நடத்தப்பட்டு காலை 11 மணிக்கு சுவாமி ரதம் ஏறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து மாலையில் தேரோட்ட விழா நடைபெற்றது. சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.ஆா். பாா்த்திபன், ஓமலூா் எம்எல்ஏ எஸ்.வெற்றிவேல், முன்னாள் எம்எல்ஏக்கள் பல்பாக்கி கிருஷ்ணன், சிவபெருமான் ஆகியோா் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனா். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.