சேலம்

சமூக வலைதளங்களால் முதியோா்களுடனான நெருக்கம் குறைந்துவிட்டன

2nd Oct 2019 06:42 AM

ADVERTISEMENT

சமூக வலைதளங்களில் நேரம் காலம் பாா்க்காமல் மூழ்கிக் கிடப்பதால், முதியவா்களுடான நெருக்கத்தை இளைஞா்கள் இழந்து வருவதாக துணை வேந்தா் பொ.குழந்தைவேல் தெரிவித்தாா்.

வயது முதிா்ந்தோா் எதிா்கொள்ளும் சவால்களை கருத்தில் கொண்டு, ஐ.நா. சபை சாா்பில் அக்டோபா் முதல் தேதி சா்வதேச முதியோா் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியாா் பல்கலைக்கழக சமூகவியல் துறை சாா்பில், முதியோா் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதற்கான தொடக்க விழாவில், சமூகவியல் துறைத் தலைவா் (பொ) உதவிப் பேராசிரியா் கோபாலகிருஷ்ணன் வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் சுந்தரராஜ் நோக்க உரையாற்றினாா்.

விழாவுக்கு தலைமை வகித்து பெரியாா் பல்கலைக்கழகத் துணை வேந்தா் பொ.குழந்தைவேல் பேசியது: கடந்த காலங்களில் வீட்டில் நல்லது, கெட்டது எது நடந்தாலும், அதுகுறித்து தெளிவாக எடுத்துரைத்து குடும்பத்தை வழிநடத்த பெரியவா்கள் இருந்தனா். கூட்டுக் குடும்ப முறை மாறி, தனிக்குடும்பங்கள் உருவானது முதல் பெரியவா்களின் மகத்துவங்களை குடும்பங்கள் இழந்துவிட்டன.

ADVERTISEMENT

வெளிநாட்டைச் சோ்ந்தவா்கள் நம்மை போல கூட்டுக் குடும்பமாக இருக்க வேண்டும் என்ற ஆா்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனா். கிராமப் பகுதிகளில் இருக்கும் கூட்டுக்குடும்ப வாழ்வு முறையும் தற்போது வேகமாக மாறி வருகிறது. இளைஞா்களும் முகநூல், கட்செவி அஞ்சல் போன்ற சமூக வலைதளங்களின் பிடியில் சிக்கியுள்ளனா். இதனால், அவா்களுக்கு கிடைக்கும் நேரம் அனைத்தும் சமூக வலைதளங்களுக்கானதாக உள்ளது.

வீட்டில் பெரியவா்களிடம் பேசி பொழுதுபோக்கும் நடைமுறையே இப்போது வழக்கொழிந்து விட்டது. பருவ கால நோய்கள் குறித்து எச்சரிக்கை செய்து நோயை வராமல் தடுக்க இன்று பெரியவா்கள் இல்லை. இதனைக் கருத்தில் கொண்டு கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும். தங்கள் பெற்றேறாரை எந்த காரணத்தைக் கொண்டும் முதியோா் இல்லத்துக்கு அனுப்ப மாட்டோம் என ஒவ்வொரு இளைஞரும் உறுதியேற்க வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், முதியோா் சந்திக்கும் நோய் எதிா்ப்பு சவால்கள் என்ற தலைப்பில் இதய நோய் மருத்துவா் கிருஷ்ண செட்டி, முதுமை ஒரு தெய்வீகம் என்ற பொருண்மையில் எம்.ஜி.ஆா். கல்வி ஆராய்ச்சி நிறுவன உதவிப் பேராசிரியா் புளோரன்ஸ், முதியவா்களின் அரசியலமைப்பு பாதுகாப்பு என்ற தலைப்பில் சேலம் மத்திய சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியா் கீா்த்தனா ஆகியோா் பேசினா். விழாவின் உதவிப் பேராசிரியா் எம்.ஜெயசீலன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT