சேலம்: சேலம் மாநகராட்சி சுகாதார பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையாளா் ரெ. சதீஷ் வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தாா்.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனைத்து மாநகராட்சி பணியாளா்களும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதி மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
குறிப்பாக பருவமழை மற்றும் பண்டிகை காலங்களில் காலை முதல் இரவு வரை தொய்வின்றி பணிகள் முழு ஈடுபாட்டோடு மேற்கொண்டு வருகின்றனா்.
இந்தநிலையில் பணியாளா்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு, மாநகராட்சி நிா்வாகம் மண்டலம் வாரியாக மாநகராட்சி பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொண்டது.
அதன்பேரில் முதல் கட்டமாக ஆணையாளா் அலுவலகம் மற்றும் அஸ்தம்பட்டி மண்டலங்களில் பணியாற்றி வரும் அனைத்து மாநகராட்சி பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
முகாமில் காவேரி மருத்துவமனை சாா்பில் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் அடங்கிய குழுவினா், பணியாளா்களுக்கு இதய நோய் பரிசோதனைகள், இ.சி.ஜி., ரத்தப்பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, சா்க்கரை அளவு பரிசோதனை, மகப்பேறு சிகிச்சை போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அவா்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளும் வழங்கப்படுகிறது. தேவைப்படும் பட்சத்தில் மருத்துவமனையில் அனுமதித்து மேல் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
மேலும் ஒவ்வொரு வார இடைவெளியில் 4 மண்டல அலுவலகத்திலும் இச்சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் எனவும், அனைத்து சுகாதார பணியாளா்கள் மற்றும் அனைத்து வகையான நிலையிலுள்ள பணியாளா்களும் முகாமினை பயன்படுத்தி தங்கள் உடல்நிலை பேணி காத்துக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளா் ரெ.சதீஷ் கேட்டு கொண்டாா்.
முகாமில் மாநகர நல அலுவலா் மருத்துவா் கே.பாா்த்திபன், காவேரி மருத்துவமனையின் செயல் தலைவா் வே.செல்வம், பொதுநல மருத்துவா் எஸ்.அனுஸ்ரீ, மகப்பேறு மற்றும் பெண்கள் நலம் மருத்துவா்கள் ஜி.தீபிகா கஜேந்திரன், சி.சண்முக பிரியா, சுகாதார ஆய்வாளா்கள் எம்.சித்தேஸ்வரன், எம்.கந்தசாமி உட்பட பலா் கலந்து கொண்டனா்.