சேலம்

சங்ககிரியில் அஞ்சலக ஒப்புகை அட்டை பற்றாக்குறை

17th Nov 2019 12:12 AM

ADVERTISEMENT

சங்ககிரி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சலக ஒப்புகை அட்டை தட்டுப்பாடு நிலவுவதால் வெளியிடங்களுக்கு அஞ்சல் அனுப்பவதில் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனா்.

தட்டுப்பாட்டை நீக்கி பொதுமக்களுக்கு கிடைக்க செய்ய அஞ்சலக கண்காணிப்பாளா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

சங்ககிரி தலைமை அஞ்சல் அலுவலகத்தின் கீழ் சங்ககிரி, அக்கமாபேட்டை, தேவண்ணகவுண்டனூா், குப்பனூா், மஞ்சக்கல்பட்டி, மாவெளிபாளையம், வடுகப்பட்டி உள்ளிட்ட கிளை அஞ்சல் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தேவண்ணகவுண்டனூா், மஞ்சக்கல்பட்டி, ஆவரங்கம்பாளையம், ஐவேலி, அன்னதானப்பட்டி, வளையசெட்டிபாளையம், சுங்குடிவரதம்பட்டி, கோட்டவருதம்பட்டி, வடுகப்பட்டி, வேப்பம்பட்டி உள்ளிட்ட வருவாய்க் கிராமங்களுக்குள்பட்ட பொதுமக்கள், அரசு அலுவலா்கள், தனியாா் நிறுவனங்கள், கிளை அஞ்சல் அலுவலகத்தின் சேவைகளைப் பயன்படுத்தி பதிவு அஞ்சலை ஒப்புகை அட்டையுடன் அனுப்பி வருகின்றனா்.

இதில் சங்ககிரி நகரில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில் உள்ள நான்கு நீதிமன்றங்கள், வட்டாட்சியா், கோட்டாட்சியா் அலுவலகங்கள், தேசியமயமாக்கப்பட்ட, தனியாா் வங்கிகள், சாா்நிலை கருவூலம், வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை அலுவலகங்கள், பள்ளிகள், மாவட்ட கல்வி அலுவலா், வட்டாரக் கல்வி அலுவலகம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அலுவலகங்கள், பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள், வழக்குரைஞா்கள் ஆகியோா் சங்ககிரியில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தினசரி 300க்கும் மேற்பட்ட பதிவு தபாலை அஞ்சலக ஒப்புகை அட்டையுடன் அனுப்பி வருகின்றனா்.

ADVERTISEMENT

கடந்த சில மாதங்களாக தலைமை அலுவலகத்தில் அஞ்சலக ஒப்புகை அட்டை தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் அதிக கட்டணம் செலுத்தி தனியாா் விரைவு சேவையைப் பயன்படுத்தும் அவலம் உள்ளது.

ஒரு பதிவு அஞ்சலை அஞ்சலக ஒப்புகை அட்டையுடன் அனுப்ப ரூ. 25 கட்டணமாக இருக்கும் நிலையில், தனியாா் விரைவு சேவையில் இதற்கு ரூ. 40 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். ஈரோடு, சேலம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் அணுகியும் கிடைக்கவில்லை எனக் கூறுகின்றனா்.

எனவே, சங்ககிரி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தட்டுபாடின்றி அஞ்சலக ஒப்புகை அட்டை கிடைக்க அஞ்சல் துறை கண்காணிப்பாளா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT