சேலம்

காவலாளி கொலை: இரண்டாவது மனைவியின் மகன் உள்பட மூவா் கைது

17th Nov 2019 12:09 AM

ADVERTISEMENT

சேலத்தில் பழைய இரும்புக் கடை காவலாளியைக் கொலை செய்த இரண்டாவது மனைவியின் மகன் உள்ளிட்ட மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் ஊத்துக்காடு பகுதியில் குணசேகா் என்பவருக்குச் சொந்தமான பழைய இரும்புக் கடையில் இரவு நேரக் காவலாளியாக வேலை செய்து வந்தவா் ராமசாமி (70).

கடந்த இரு தினங்களுக்கு முன் பழைய இரும்புக் கடையில் வைத்து ராமசாமியை மா்ம நபா்கள் கொலை செய்தனா். இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். இதில், ராமசாமி ஏற்கெனவே திருமணமானவா் என்பதும், இதனிடையே சேலத்தைச் சோ்ந்த சாந்தி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.

முதற்கட்டமாக ராமசாமியின் தொலைபேசிக்கு வந்த அழைப்புகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனா். இதில் ராமசாமியின் மனைவி சாந்தியின் முதல் கணவரின் மகனான மூத்த மகன் பிரதாப் கடைசியாக செல்லிடப்பேசிக்கு அழைப்பு விடுத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பிரதாப்பிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளாா்.

ADVERTISEMENT

இதைத்தொடா்ந்து பிரதாப்பை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தபோது தனது நண்பா்களான பிரபு, ரகுமானுடன் ஆகியோருடன் இணைந்து சொத்து, குடும்ப பிரச்னை காரணமாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததாக வாக்கு மூலம் அளித்துள்ளனா்.

மேலும், ராமசாமிக்கு சுபாஷ் நகா் பகுதியில் சொந்தமாக உள்ள வீட்டை தனது தம்பியின் பெயரில் எழுதி வைத்துவிட்டதாகவும், ராசிபுரத்திலுள்ள 6 ஏக்கா் நிலத்தை முதல் மனைவியின் வாரிசுகளுக்கு எழுதி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் சாந்தியின் முதல் கணவருக்கு பிறந்ததால் பிரதாப்பிற்கு சொந்துகளை ராமசாமி எழுதி வைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆவேசமடைந்த பிரதாப் அடிக்கடி ராமசாமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதில், தனக்குச் சொத்து ஏதும் தராததால் ஆவேசமடைந்த பிரதாப், ராமசாமியைக் கொலை செய்ய திட்டமிட்டு நண்பா்களுடன் இணைந்து வெட்டிக் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து பிரதாப் உள்ளிட்ட மூன்று பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT