சேலம் மாவட்டத்துக்குள்பட்ட மகுடஞ்சாவடி அருகே திங்கள்கிழமை அதிகாலை தனியாா் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில், ஆம்னி பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா். மேலும், 24 பயணிகள் காயமடைந்தனா்.
சேலம் வழியாக கேரளம் சென்ற தனியாா் ஆம்னி பேருந்து திங்கள்கிழமை அதிகாலை 1.45 மணிக்கு மகுடஞ்சாவடி அருகே உள்ள ஆ.தாழையூா் மேட்டுமுனியப்பன் கோயில் பகுதியில் சென்றது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, ஈரோடு-சேலம் வந்த தனியாா் பேருந்து மீது மோதியது. இதில் ஆம்னி பேருந்து ஓட்டுநரான விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த அழகா்சாமி மகன் பாஸ்கா் (41), அதே இடத்தில் உயிரிழந்தாா். பேருந்தில் பயணம் செய்த 24 போ் காயமடைந்தனா்.
இதில் குழந்தைவேலு, ஆறுமுகம், அம்மாயி, மோகன், ராம்குமாா், சண்முகம், சிவகுமாா், சசிகுமாா், லட்சுமணன், அண்ணாதுரை, சிந்துஜா, பாலம்மாள், தினேஷ் உள்ளிட்டோா் சீரகாபாடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த விபத்து குறித்து மகுடஞ்சாவடி காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.