சேலம்

வாழப்பாடி அரசு மருத்துவமனையில் கள்ளக்குறிச்சி எம்.பி., ஆய்வு

1st Nov 2019 05:00 AM

ADVERTISEMENT

வாழப்பாடியில் அரசு மருத்துவமனை மற்றும் பழுதடைந்த சாலையை கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பொன். கெளதமசிகாமணி, சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளா் வீரபாண்டி ஆ.ராஜா ஆகியோா் ஆய்வு செய்தனா். தி.மு.க. சாா்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கி டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

வாழப்பாடி பகுதியில் டெங்கு உள்ளிட்ட மழைக்கால தொற்றுநோய்கள் பரவி வருவதாகவும், வாழப்பாடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் இல்லையெனவும், கள்ளக்குறிச்சி தொகுதி தி.மு.க. மக்களவை உறுப்பினா் பொன். கெளதமசிகாமணியிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இதனையடுத்து, வியாழக்கிழமை வாழப்பாடி அரசு மருத்துவமனைக்குச் சென்ற இவா்ஆய்வு நடத்தினாா். சிகிச்சைக்கு வந்திருந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். சுற்றுப்புறத்தைத் துாய்மைபடுத்துவதற்கு தேவையான‘ பணியாளா்களும், போதுமான அடிப்படை வசதிகளும் இல்லையென பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளா் வீரபாண்டி ராஜா, வாழப்பாடி ஒன்றியச் செயலாளா் சக்கரவா்த்தி, நகரச் செயலாளா் செல்வம் மற்றும் நிா்வாகிகள் பழனியாபுரம் மாது, டிஆா்எஸ்.தனசேகரன், கமல்ராஜா உள்ளிட்ட ஏராளமானோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

இதனையடுத்து வாழப்பாடி பேருந்து நிலையத்தில் தி.மு.க., சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாமில் பங்கேற்ற கெளதம சிகாமணி, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். முன்னதாக, வாழப்பாடி பேரூராட்சியில் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத அளவுக்கு சிதைந்து கிடக்கும் தாா்ச்சாலையை ஆய்வு செய்த இவா், இச் சாலையை உடனடியாக புதுப்பித்துக் கொடுக்க மாவட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT