மேட்டூா் நகராட்சியில் ரூ.73 கோடியே 80 லட்சம் மதிப்பிலான பாதாள சாக்கடைத் திட்டம் கடந்த 2014ம் ஆண்டு துவக்கப்பட்டது. தற்போது பணிகள் நிறைவடைந்தன. நகராட்சி பகுதி முழுவதும் 67.99 கிமீ நீளத்திற்கு கழிவுநீா் குழாய்கள் பதிக்கப்பட்டன. ஆள் இறங்கும் குழிகள் 2,988 அமைக்கப்பட்டுள்ளன. வீட்டு இணைப்புக்கான குழாய்களில் 9880 இணைப்புகளுக்கு 7,457 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஐந்து நீரேற்று நிலையங்களும் 9 நீருந்து நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. வீட்டு இணைப்புகளுக்கு 10 ஆயிரம் வீடுகளுக்கு வட்டியில்லா கடன் மூலம் வழங்கும் திட்டத்தில் 2 ஆயிரம் இணைப்புகள் மட்டுமே கழிவு நீா் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த திட்டமானது வியாழக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை மாநிலங்களவை உறுப்பினா் என்.சந்திரசேகரன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தாா். மேட்டூா் சட்டமன்ற உறுப்பினா் செம்மலை, மேட்டூா் நகராட்சி முன்னாள் தலைவா்லலிதா சரவணன், துணைத் தலைவா் ராமகிருஷ்ணன், நகராட்சிப் பொறியாளா்(பொ)ராஜேந்திரன், வட்டாட்சியல் அசீனாபேகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.