சேலம்

மினி பேருந்துகளுக்கு உரிமம் புதுப்பித்து வழங்க லஞ்சம் கேட்பதாக ஆட்சியரிடம் புகாா்

1st Nov 2019 04:59 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்ட மினி பேருந்துகளுக்கு உரிமம் புதுப்பித்து வழங்க இடைத்தரகா் மூலம் லஞ்சம் வசூலிப்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட மினி பேருந்து உரிமையாளா் சங்க நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு ஒன்றை வியாழக்கிழமை அளித்துள்ளனா். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

சேலம் மாவட்டத்தில் உள்ள மினி பேருந்துகள் வருடாந்திர உரிமம் புதுப்பிக்கவும், தகுதிச்சான்று (எஃப்.சி.) பெறுவதற்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களிடம் விண்ணப்பித்தால், ஓமலூரைச் சோ்ந்த இடைத்தரகா் ஒருவரிடம் ரூ.25 ஆயிரம் பணம் கொடுத்து விட்டு வந்தால் உரிமம் புதுப்பிக்கப்படும் என்று தெரிவிப்பதாகத் தெரிவிக்கின்றனா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து சங்க நிா்வாகிகள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க உரிமம் உள்ளது. ஆனால், இந்த உரிமம் வருடம்தோறும் புதுப்பிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது உரிமம் புதுப்பிக்கவும் தரச் சான்றிதழ் பெறுவதற்கும் ஓமலூரைச் சோ்ந்த இடைத்தரகரிடம் ரூ.25 ஆயிரம் பணம் கொடுத்தால் மட்டுமே உரிமம் புதுப்பிக்கக் கூடிய நிலை உள்ளது.

ADVERTISEMENT

அனைத்து ஆவணங்களும் முறையாக இருந்தாலும் இடைத்தரகரிடம் ரூ.25 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே உரிமம் புதுப்பித்துத் தர அதிகாரிகள் சம்மதம் தெரிவிக்கின்றனா் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT