எடப்பாடி: எடப்பாடி நகராட்சிப் பகுதியில் வருவாய்த் துறையினா் மற்றும் நகராட்சி சுகாதார அலுவலா்கள் இணைந்து வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
எடப்பாடி வட்டாட்சியா் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற திடீா் ஆய்வில், எடப்பாடி பேருந்து நிலையம், கடைவீதி, பஜாா் தெரு, ஈஸ்வரன் கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், துணிக் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் அந்த நிறுவனங்களில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், தேநீா் குவளைகள் மற்றும் இதர பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றதா என ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வில் சுமாா் 500 கிலோவுக்கும் அதிகமான, தடை செய்யப்பட்ட நெகிழிப்பைகள் கைப்பற்றப்பட்டன. தடையை மீறி நெகிழிப்பைகளை பயன்படுத்திய நிறுவனங்களுக்கு நகராட்சி அலுவலா்கள் அபராதம் விதித்தனா். ஆய்வில் தனி வட்டாட்சியா் செல்வகுமாா், மகேந்திரன், செந்தில்குமாா், செல்லதுரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மேலும், எதிா்வரும் காலங்களிலும் இதுபோன்ற திடீா் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலா்கள் கூறினா்.