வறட்சி, குடிநீர் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, சேலத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர் வையாபுரி பேசியது:-
சேலம் மாவட்டத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.இதனால் கால்நடை தீவனங்கள் விலை உயர்வு காரணமாக கால்நடைகளை வளர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எட்டு வழி சாலை, உயர் அழுத்த மின் கோபுரம் போன்ற பல்வேறு பணிகளில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, விவசாயிகள் பாதிக்கும் திட்டங்களைக் கைவிட வேண்டும். விவசாயிகளுக்கு வங்கிக் கடன்களை திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சேலம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசுக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும் என்றார். இதே கருத்தை பலரும் வலியுறுத்தி பேசினர்.
நிறைவில் ஆட்சியர் பேசியது:-
சேலம் மாவட்டத்தில் இயல்பான ஆண்டு மழை அளவு 997.9 மி.மீ. ஆகும். 25.06.2019 முடிய 194.0 மி.மீ. மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் மே வரை 19,841 எக்டர் பரப்பில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில் நுண்ணுயிர் பாசனம் அமைத்து குறைந்த நீரில் அதிக மகசூல் செய்து பயன் அடைய வேண்டும். விவசாயிகள் வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று பயன்பெற வேண்டும்.
தண்ணீர் மேலாண்மை மூலம் கால்நடைகளுக்கு தேவையான தீவனம், தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் எந்தவித தாமதமும் இல்லாமல் 100 சதவீதம் பயிர் காப்பீடு கிடைக்க நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநர் (பொறுப்பு) கமலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) செல்லதுரை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் மு.தனலட்சுமி, தோட்டக்கலைத்துறையின் துணை இயக்குநர் இந்திரா காந்தி, முன்னோடி வங்கி மேலாளர் பழனிவேல்ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வருத்தமும், வாழ்த்தும்..!
சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸின் பணியிட மாறுதலுக்கு விவசாயிகள் வருத்தத்தையும், வாழ்த்துகளையும்
தெரிவித்தனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தமிழ்நாடு இசை, கவின் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும், வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் சேலம் மாவட்ட ஆட்சியராகவும் வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், ரோகிணி பங்கேற்றார்.
அப்போது, விவசாயிகள் பலர் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸின் பணியிட மாறுதலுக்கு வருத்தம் தெரிவித்து உணர்ச்சிப்பூர்வமாக வாழ்த்தினர்.
கூட்ட முடிவில் விவசாயி ஒருவர் ஆட்சியர் ரோகிணிக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைப் பெற்று கொண்டு கண்ணீர் மல்க ஆட்சியர் ரோகிணி பேசியது:-
கடந்த காலங்களில் எத்தனையோ சால்வைகள் தனக்கு அணிவித்திருந்தாலும், விவசாயிகள் அணிவித்து கெளரவித்த இந்த சால்வையைத்தான் பெருமையாகக் கருதுகிறேன்.
மாவட்ட ஆட்சியராக மட்டுமின்றி ஒரு விவசாயியின் மகளாக, இந்த கூட்டத்தில் விவசாயிகளின் பாராட்டை பெறுவதில் மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் விவசாய குறைதீர் கூட்டத்தில் பங்கேற்றதைப்போல, இறுதியாக குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் நலன் கருதி பங்கேற்றேன் என்றார்.