சேலம்

கிராமங்களில் பாஜகவுக்கு உறுப்பினர் சேர்க்கை: மாநிலச் செயலர் சீனிவாசன் பேச்சு

29th Jun 2019 09:41 AM

ADVERTISEMENT

கிராமங்கள்தோறும் பாஜகவுக்கு உறுப்பினர்களை சேர்க்கும் முகாம்களை நடத்த வேண்டும்  என்று கட்சியின் மாநிலச் செயலர் சீனிவாசன் தெரிவித்தார்.
சேலம் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் அமைப்பு திருவிழா - உறுப்பினர் சேர்க்கை இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.   இதில், சீனிவாசன் பேசியது:-
பாஜக மீது பொய்யான தகவலை சில கட்சியினர் பரப்பி,  மக்கள் மனதில் வெறுப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்தியா முழுக்க பாஜக வளர்ந்த கட்சியாக இருந்தாலும்,  தமிழகத்தில் மக்கள் மனதில் இடம்பிடிக்க நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.  
கிராமங்கள்தோறும் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியைத் துவங்க வேண்டும்.  அதற்கு 10 பேர் கொண்ட குழுவாக செல்லும்போது மக்களுக்கு பாஜக மீதான நம்பிக்கையை உருவாக்க முடியும்.
பாஜக தான் தமிழக மக்களின் தேவைகளை உணர்ந்து நிறைவேற்றி கொடுக்கும் கட்சியாக உள்ளது. 
அனைத்து மாநில மக்களுக்கும் சமமான பாதுகாப்பை பிரதமர் நரேந்திர மோடி அளித்து வருகிறார்.  இந்தியா வளர்ந்த நாடாக உருவாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். 
விவசாயிகளுக்கான பல நல்ல திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்களை மோடி தான் கொண்டுவந்தார் என்பதை மக்களிடம் கூறி பாஜகவில் இணைக்க வேண்டும்.
முறையாக உறுப்பினர் சேர்க்கையை செய்தால் அடுத்த தேர்தலில் மக்கள் பலம் மிக்க கட்சியாக உருவெடுக்கும். மக்களின் நம்பிக்கைக்கு உரியவாறு பணியாற்றி அனைத்து தரப்பு மக்களையும் சேர்த்து,  தமிழக பாஜகவை ஆட்சி கட்டில் அமர வைக்க அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.
கூட்டத்துக்கு மாவட்டத்  தலைவர் சவுந்திரராஜன் தலைமை வகித்தார். கோட்டப்  பொறுப்பாளர் முருகேசன், இணை கோட்டப் பொறுப்பாளர் அண்ணாதுரை, அமைப்புச் செயலர் சுதிர் முருகன், மாவட்டப் பொருளாளர் ரவி, உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்கள் ராஜேந்திரன், கலைசெல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT