சேலம்

விநாயகர் சதுர்த்தி: மோட்டூர் கிராமத்தில் 3,000 சிலைகள் தயாரிப்பு

31st Jul 2019 09:24 AM

ADVERTISEMENT

சங்ககிரி வட்டம், காவேரிபட்டி ஊராட்சியில் உள்ள மோட்டூர் கிராமத்தில் விநாயகர் சதுர்த்திக்காக நிகழாண்டு 3,000 சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
 காவேரிபட்டி ஊராட்சிக்குட்பட்ட மோட்டூர் என்ற சிறிய கிராமத்தில் வசிப்பவர் சின்னசக்தி. கடந்த எட்டு ஆண்டுகளாக சிலருடன் சேர்ந்து விநாயகர் சிலைகளைத் தயாரித்து வருகிறார். கிழங்கு மாவு, காகித கூழ், ரசாயனம் இல்லாத வர்ணங்கள், ஆற்றில் எளிதில் கரையக்கூடிய அளவில் இவர்கள் தயார் செய்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் அந்தந்த வருடத்தின் சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல் சிலைகளைத் தயாரித்து வருகின்றனர்.
 நிகழாண்டு அரை அடியிலிருந்து 16 அடி வரைக்கும் ஒன்று, இரண்டு, மூன்று, ஐந்து வாகனங்கள் கொண்ட கணபதி, ஓய்யாரக் கணபதி, ராஜதர்பார், நாகலிங்க, காமதேனு, சிங்கம், ஆதி ஷேச, நர்த்தன, சனி லிங்கம், பறவை வாகனம், கருடாழ்வார், பஞ்ஜாசனம், பஞ்ஜாசனம், பாண்டுரங்கன், மயில் அன்னம், பாகுபலி, நிலா கணபதிகள் சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
 பக்தர்கள் ஆகஸ்ட் 3-ஆம் தேதி சனிக்கிழமை வரை முன்பதிவு செய்பவர்களுக்கு 10 சதவீத கழிவுகளுடன் தயார் செய்து தருகிறார்களாம். நிகழாண்டு மழை பொய்த்து வருவதால் மழை பொழிந்து தஞ்சை நெற்களஞ்சியம் செழிக்க வேண்டி தஞ்சை நந்தி கணபதியை பிரத்யேகமாக தயார் செய்து வருகின்றனர்.
 மேலும் பார்வதி தாயாரை விநாயகருடன் வைத்து வழிபட்டால் மழை பெய்யும் என்ற பக்தர்களின் நம்பிக்கையையொட்டி பக்தர்கள் வாங்கிச்செல்லும் ஒவ்வொரு விநாயகர் சிலையுடன் ஒரு கௌரி சிலையும், மரக்கன்றுகளும் இலவசமாக வழங்குவும் திட்டமிட்டு சிலைகளைத் தயாரித்து வருகின்றனர்.
 தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாகக் கொண்டாடுவதற்காக சிலைகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.
 இதுகுறித்து சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சின்னசக்தி கூறியதாவது:
 ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதம் கார்த்திகை 1-ஆம் தேதி ஆரம்பித்து ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் வரை விநாயகர் சிலைகளைத் தயாரித்து வருகிறோம். சிலைகளை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளை கடைப்பிடித்துத் தயாரித்து வருகிறோம். சிலைகள் வாங்கிச் செல்வோருக்கு மரக் கன்றுகளையும் இலவசமாக வழங்க விழுப்புரத்திலிருந்து தரமான மரக்கன்றுகளை வாங்கி வந்து சிலைகளுடன் கொடுக்கிறோம். கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியைக் கொண்டு எங்கள் ஊரில் உள்ள அங்கன்வாடி மையம், ஊராட்சி தொடக்கப் பள்ளிக்குத் தேவையான பொருள்களை வழங்கி வருகிறோம் என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT