சேலம்

"மனம் மகிழ்வோடு இருந்தால் உடல் சிறப்பாக இயங்கும்'

31st Jul 2019 09:21 AM

ADVERTISEMENT

"மனதை மகிழ்ச்சியாகவும், இயல்பாகவும் வைத்திருந்தால் உடல் சிறப்பாக தனது பணிகளை மேற்கொள்ளும்' என பிரபல இதய மருத்துவரும் மணிப்பால் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான பத்மபூஷன் பேராசிரியர் பி.எம். ஹெக்டே தெரிவித்தார்.
 பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஆசிரியர் சொற்பொழிவின் 10 ஆவது நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. துணைவேந்தர் தலைமையில் நடைபெற்ற விழாவில் பேராசிரியர் பி.எம். ஹெக்டே பங்கேற்றுப் பேசியதாவது:
 நல்ல ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவர்களை நேசிக்கும் பண்பு கொண்டவர்களாகவும், தமது அறிவுத்திறத்தால், மாணவர்களை ஈர்க்கும் பண்பைக் கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். ஆசிரியர்கள் தமது கற்பித்தல் பணியை விரும்பி ஈடுபாட்டுடன் மேற்கொள்ள வேண்டும்.
 இன்றைக்கு மருத்துவ உலகில் முழு உடல் பரிசோதனை என்ற பெயரில் மக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். உடலில் நோய்க்கான அறிகுறிகள் இல்லாதபட்சத்தில் மருத்துவரை நாடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். நோய்க்கான அறிகுறி இல்லாத நிலையில் மருத்துவரை அணுகி இல்லாத நோய்க்கு நோயாளியாக மாறுகின்ற அவலம் காணப்படுகிறது.
 மருத்துவ உலகம் பணம் ஈட்டும் தொழிலாக மாறி வருவதால் மக்கள் தான் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் என்பது மனம் தொடர்புடையதாகும். மனதை மகிழ்ச்சியாகவும், இயல்பானதாகவும் வைத்திருக்கப் பழக வேண்டும். நம்பிக்கையுடன் வாழ்க்கையை அணுகினால் உடல் இயக்கத்துக்கான ஆற்றல் கிடைக்கும் என்றார் அவர்.
 நிகழ்ச்சியில் பேராசிரியர் பி.எம். ஹெக்டே-வுக்கு பல்கலை. துணைவேந்தர் பொ. குழந்தைவேல் நினைவுப் பரிசு வழங்கினார். இயற்பியல் துறைத்தலைவர் பேராசிரியர் பி.குமாரதாஸ் வரவேற்றார்.
 
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT