கொங்கணாபுரம் அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழந்த வழக்கில் லாரி ஓட்டுநருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சங்ககிரி 2-ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி திங்கள்கிழமை தீர்ப்பளித்தார்.
எளம்பிள்ளையை அடுத்த இடங்கணசாலை கிராமம், பழக்காரன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி ஊரில் நடைபெறும் பண்டிகைக்காக உறவினர் தங்கவேல் மனைவி ரேவதி, அவர்களது மகன்கள் ஸ்ரீதர், அய்யம்பெருமாள் ஆகியோரை இவரது இரு சக்கர வாகனத்தில் உட்காரவைத்து கொங்கணாபுரத்தில் இருந்து சின்னப்பம்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது லாரி மோதியதில் ரேவதி நிகழ்விடத்திலேயும், ஸ்ரீதர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர். கோவிந்தராஜ் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அய்யம்பெருமாள் காயமின்றி உயிர் தப்பினார். எடப்பாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர் செல்வம் (40) என்பவரை கைது செய்து சங்ககிரி 2-ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இவ் வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் திங்கள்கிழமை நீதிபதி எஸ். உமா மகேஸ்வரி தீர்ப்பளித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட லாரி ஓட்டுநர் செல்வத்துக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.