சேலம் உருக்காலையை பொதுத்துறை நிறுவனமாகவே நீடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.
சேலம் உருக்காலையைத் தனியார்மயமாக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், தனியார் மயமாக்கலைக் கைவிட வலியுறுத்தியும், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் கூறியது:-
தமிழகத்தின் அடையாளமாகவும், மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றுமான சேலம் உருக்காலையைத் தனியாருக்கு விற்பனை செய்வதை பாஜக அரசு கைவிட வேண்டும்.
தற்போது உள்ள சூழலில், பொதுத் துறை நிறுவனத்துக்கு 10 ஏக்கர் நிலம் கூட கையகப்படுத்திட முடியாத நிலையில், 4,000 ஏக்கர் நிலத்தை சேலம் உருக்காலைக்காக மட்டுமே மக்கள் வழங்கியுள்ளனர். இதைத் தனியாருக்குக் கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
சேலம் உருக்காலையைப் பொதுத் துறை நிறுவனமாகவே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோல விமான நிலையங்களின் பராமரிப்புகளைத் தனியார் வசம் ஒப்படைக்கும் மத்திய அரசு முடிவு கண்டிக்கத்தக்கதாகும்.
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளது. மக்கள் திமுகவை வெற்றி அடைய செய்ய தயாராக உள்ளனர்.
கர்நாடகத்தில் பாஜக வெற்றி பெற்றிருப்பது நியாயமான வெற்றி அல்ல. சூழ்ச்சி செய்து பெற்ற வெற்றியாகும். சேலம் -சென்னை இடையிலான எட்டு வழி சாலை என்பது தேவையற்றது என்றார்.
முன்னதாக, போராட்டத்துக்கு முன்னாள் மாநிலத் தலைவர் கே.வீ. தங்கபாலு தலைமை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சிரிவெல்லபிரசாத், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா, காங்கிரஸ் மாநிலச் செயல் தலைவர் ஆர். மோகன் குமாரமங்கலம், மாநகர மாவட்டத் தலைவர் ஜெயபிரகாஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் மோகன், மதிமுக மாநகர மாவட்டச் செயலாளர் ஆனந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.