சேலம்

உலகம் முழுவதும் இந்து மதத்தை மக்கள் பெரிதும் மதிக்கின்றனர்: இந்து முன்னணி மாநிலத் தலைவர்

29th Jul 2019 08:38 AM

ADVERTISEMENT

வாழப்பாடியில், சேலம் கோட்ட இந்து முன்னணி சார்பில், தேசிய விழிப்புணர்வு மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், "இந்து மதத்தை உலகம் முழுவதும் மக்கள் பெரிதும் மதிக்கின்றனர்' என்றார். சேலம் கோட்ட இந்து முன்னணி சார்பில், வாழப்பாடியில் தேசிய விழிப்புணர்வு மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். கெங்கவல்லி ஒன்றியச் செயலாளர் முருகேசன் வரவேற்றார். மாநில அமைப்பாளர் பக்தன், மாவட்டச் செயலாளர் ஜெயராம பிரசாத், கோட்டத் தலைவர் சந்தோஷ்குமார், கிழக்கு மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநில பேச்சாளர் சிங்கை பிரபாகரன், மாநிலச் செயலாளர் தாமு. வெங்கடேஸ்வரன் ஆகியோர், இந்துக்களிடையே ஏற்பட வேண்டிய தேசிய விழிப்புணர்வின் முக்கியத்துவம் குறித்துப் பேசினர்.
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசியதாவது:
"இந்தியாவுக்கு இன்று ஒரு திறமையான பிரதமர் கிடைத்திருக்கிறார் என்றால், இதற்கு இந்து முன்னணி போன்ற அமைப்புகள் செய்த தியாகம்தான் காரணம். அபுதாபியில் இந்து கோயில் கட்டுவதற்கு, அந் நாட்டு மன்னர் 300 ஏக்கர் நிலம் தந்து இந்துகளுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். ஓமன் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளிலும் இந்து மதத்தை மக்கள் பெரிதும் மதிக்கின்றனர். உலகம் முழுவதும் தற்போது மாறிவரும் சூழல் வரவேற்கத்தக்கதாகும் என்றார். மாநாட்டில்,  வாழப்பாடி செல்வ விநாயகர் கோவில் ஆக்ரமிப்புகளை அகற்றி, இந்துசமய அறநிலையத்துறை நிலத்தை மீட்க வேண்டும். பேளூர் தான்தோன்றீஸ்வரன் கோயிலில் ஆகமவிதிப்படி பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வாழப்பாடி ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT