சேலம்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்கப்படுமா?

29th Jul 2019 08:43 AM

ADVERTISEMENT

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பக்தர்கள் புனித நீராடுவதற்கு வசதியாக, காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்கப்படுமா?  என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆண்டுதோறும் ஆடி மாதம் 18 ஆம் தேதி நடைபெறும் ஆடிப் பெருக்கு விழாவில், எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி, கல்வடங்கம் உள்ளிட்ட காவிரிக் கரை பகுதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி ஆடிப் பெருக்கு விழா கொண்டாடுவது
வழக்கம்.
கடந்த ஆண்டு ஆடிப் பெருக்கு விழா சமயத்தில், கேரளத்தில் பெய்த கனமழை மற்றும் கர்நாடக காவிரி  நீர்பிடிப்புப் பகுதியில் பெய்த தொடர் மழையால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
கர்நாடக அணைகளிலிருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டதால், தமிழக காவிரிகரைப் பகுதியில் வெள்ளம் அபாயக் கட்டத்தைத் தாண்டி பாய்ந்தது.
இதனால், கடந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழாவுக்கு வந்த பக்தர்கள், காவிரியில் புனித நீராட பாதுகாப்பான இடம் தேடி அலைந்தனர்.
அதே சமயம் கடந்த ஆண்டு கடல்போல் பாய்ந்த காவிரி, நிகழாண்டில் ஓடை போல்  செல்வதால் ஆடிப்பெருக்கு விழாவுக்கு இப் பகுதிக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், புனித நீராடுவது கேள்விக்குறியாகி உள்ளது.
இந் நிலையைப் போக்கும் வகையில் தமிழக அரசு ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரியில் கூடுதல் நீர் திறக்க வேண்டும் என பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT