சேலத்தில் 14 கிலோ மான் கறி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சேலம் கோரிமேடு அருகே வியாழக்கிழமை மாலை கன்னங்குறிச்சி போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மற்றும் ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் 14 பொட்டலங்கள் இருந்தன.
ஒவ்வொன்றிலும் தலா ஒரு கிலோ கறி வீதம் இருப்பதைப் பார்த்து சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அதுபற்றி விசாரித்தனர். இதில் அது மான் கறி என்று தெரியவந்தது. மேலும் மானுடைய கால்கள் நான்கும் இருந்தன.இதையடுத்து காரில் வந்த சேலம் கருப்பூரைச் சேர்ந்த லட்சுமணன் (30) மற்றும், இருசக்கர வாகனத்தில் வந்த கன்னங்குறிச்சியைச் சேர்ந்த லோகநாதன் (25) ஆகிய இருவரையும் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள, தெற்கு வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் கார், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் பிடிபட்ட லட்சுமணன் மற்றும் லோகநாதன் ஆகியோரிடம் வனச்சரக அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது.
விசாரணையில், தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள பொய்யப்பட்டி சென்று அங்குள்ள நபர்களிடம் 14 கிலோ மான் கறி வாங்கி வந்ததும், இவர்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு விற்பனை செய்வதற்காக எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மான் வேட்டையில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரிக்க, சேர்வராயன் தெற்கு சரக அலுவலர் தலைமையில் தனிக்குழு அமைத்து, விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் மான் கறி விற்பனை தொடர்பாக அரூர் பகுதி வனச்சரகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்குள்ள வனத் துறையினர், சேலம் அஸ்தம்பட்டி வந்து விசாரணை செய்தனர்.