சேலம்

குற்றச்செயல்களை தடுக்க வாழப்பாடி போலீஸார் வியூகம்: பழைய குற்றவாளிகளை அழைத்து அறிவுரை கூறி எச்சரிக்கை

27th Jul 2019 09:26 AM

ADVERTISEMENT

வாழப்பாடி பகுதியில் குற்றச்சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, ஏற்கெனவே குற்ற வழக்குகளில் தொடர்புடைய பழைய குற்றவாளிகளை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, போலீஸார் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
 சேலம் மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, கொலை முயற்சி, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, போலீஸாருக்கு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கனிகர் உத்தரவிட்டுள்ளார்.
 இதனையடுத்து, வாழப்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், குற்றச்சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, வாழப்பாடி போலீஸார் நூதன முறையில் வீயூகம் அமைத்துள்ளனர்.
 முதற்கட்டமாக, வாழப்பாடி பகுதியில் பழைய குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை, காவல் ஆய்வாளர் சுப்பிரமணி, உதவி ஆய்வாளர் சிவசக்தி மற்றும் போலீஸார், காவல் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை அழைத்துச் சென்றனர்.
 குற்றச்செயல்களை முழுமையாகக் கைவிட்டு ,மாற்றுத்தொழில் செய்து பிழைப்பை நடத்துமாறு அறிவுரை வழங்கினர்.
 இதுமட்டுமன்றி, தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டால், குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென, போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT