சேலம்

பராமரிப்பின்றி விவசாயப் போராட்ட தியாகிகளின் நினைவிடம்

22nd Jul 2019 10:42 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து,1972-இல் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 விவசாயிகள் உயிர் நீத்தனர்.
தமிழகத்துக்கு இலவச மின்சாரம் கிடைத்திட உயிர் துறந்த அந்த விவசாயிகளின் நினைவிடமும், நினைவுத் தூணும் தற்போது பராமரிப்பின்றி உள்ளது. 
இவற்றை புதுப்பித்து மண்டபமும், பூங்காவும் 
அமைக்க வேண்டும் என விவசாயிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில், 1972-ஆம் ஆண்டு ஒரு யூனிட்டுக்கு 9 பைசாவாக இருந்த மின் கட்டணத்தை அப்போதைய தமிழக அரசு 11 பைசாவாக உயர்த்தியது.
2 பைசா மின் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  1972-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி, சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் திரளாகப் பங்கேற்றனர்.
விவசாயிகளின் போராட்டத்தை கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். ஆனாலும், விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லவில்லை. போலீஸார் மீது கல் வீசப்பட்டதால் போராட்டம் கலவரமாக மாறியது. 
இதனால் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், அப் பகுதியைச் சேர்ந்த முட்டாசு, விவேகானந்தம், ஆறுமுகம், மணி, பிச்சமுத்து, முத்துசாமி, சாந்தமூர்த்தி, கோவிந்தராஜன், நரசிங்கபுரம் ராமசாமி உள்ளிட்ட 9 விவசாயிகள் உயிரிழந்தனர்.
இதில் நரசிங்கபுரம் ராமசாமியை தவிர மற்ற 8 பேரின் உடல்களும் பெத்தநாயக்கன்பாளையம் வசிஷ்ட நதிக் கரை அருகே ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன. நினைவிடமும் அமைக்கப்பட்டது. 
இதுமட்டுமின்றி, உயிர் தியாகம் செய்த விவசாயிகளின் நினைவாக, பெத்தநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் சார்பில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டது.
அப்போதைய பேரூராட்சி மன்றத் தலைவரும், ஆத்தூர் தொகுதி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான சி. பழனிமுத்து தலைமையில் நடைபெற்ற விழாவில், மத்திய அரசின் முன்னாள் ரயில்வே துறை அமைச்சர்  சி.எம் பூனாச்சா திறந்து வைத்தார். 
வரலாற்று சிறப்பு மிக்க தியாகச் சின்னமான அந்த நினைவுத் தூண், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் போது அகற்றப்பட்டது. புதிய பேரூராட்சி மன்ற அலுவலகம் அருகே வாரச் சந்தை பகுதியில் நிறுத்தப்பட்டது. ஆனால், நினைவிடம் மற்றும் நினைவுத் தூண் ஆகியவற்றை முறையாகப் பராமரிக்காததால் பாழடைந்துள்ளன.
இந் நினைவிடத்தையும், நினைவுத் தூணையும் புதுப்பிக்கவும்,  நினைவு மண்டபம், பூங்கா அமைத்து, மின் விளக்குகள் பொருத்தி முறையாகப் பராமரிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது. 
இதுகுறித்து பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் சிலர் கூறியதாவது:
தற்கால சந்ததியினர் இவ் வரலாற்று சம்பவத்தைத் தெரிந்து கொள்ளும் வகையில் விவசாயிகள் நினைவிடம் மற்றும் நினைவுத் தூணைப் பராமரிக்க சேலம் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT