எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கால்நடை தீவனப் பற்றாக்குறையால் வெளி மாவட்டங்களிலிருந்து தீவனங்களை அதிக விலைக் கொடுத்து வாங்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கொங்கணாபுரம், தங்காயூர், கச்சுபள்ளி உள்ளிட்ட பகுதி மக்கள், விவசாயத்தையே முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.
இங்கு மானாவாரி சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்வதால், தங்கள் வாழ்வாதாரத்துக்காக உபத் தொழிலாக கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டு வருகின்றனர். இதில் கிடைக்கும் வருமானத்தை சார்ந்தே, இப் பகுதியில் உள்ள ஒவ்வொரு விவசாயக் குடும்பத்தினரும், தங்கள் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தி வருகின்றனர்.
இந் நிலையில் இப் பகுதியில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் மேச்சல் நிலங்கள் வறண்டு காணப்படுகின்றன. உரிய காலத்தில் மழைப் பொழிவு இல்லாததால் கால்நடைகளுக்கு தீவனமாகும் சோளம், நெல் மற்றும் சிறு தானிய வகைப் பயிர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் இப்பகுதியில் கால்நடைகள் வளர்த்துவரும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு போதி தீவனம் வழங்க முடியாமல் சிரமம் அடைகின்றனர்.
இந் நிலையில் டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் (நெல்) வைக்கோல் கட்டுகளைக் கூடுதல் விலைக்கொடுத்து இப்பகுதி விவசாயிகள் வாங்கிச் செல்கின்றனர்.
வெளி மாவட்டங்களில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்படும், சுமார் 25 கிலோ எடையுள்ள தீவனக்கட்டு ஒன்று, ரூ. 280 முதல் ரூ. 320 வரை விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இப்பகுதி விவசாயிகள் நிலையைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு, கடந்த வறட்சிக் காலங்களில் வழங்கியது போல் சலுகை விலையில் கால்நடை தீவனங்களை வழங்கிட வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.