சேலம்

இளம்பெண் மரணத்தில் சந்தேகம்: உறவினர்கள் மறியல்

16th Jul 2019 09:24 AM

ADVERTISEMENT

இளம்பெண் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி சேலம் அரசு மருத்துவமனை முன் உறவினர்கள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
 சேலம் மாவட்டம், ஏற்காடு கோயில்மேட்டை சேர்ந்தவர் டேவிட் என்பவரின் மகன் செல்வகுமார் (25). இவருடைய மனைவி கரிஷ்மா. இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
 இத் தம்பதிக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார். இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை கரிஷ்மாவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து செல்வகுமார் குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
 ஆனால், கரிஷ்மா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனிடையே கரிஷ்மாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் ஏற்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 இந் நிலையில் கரிஷ்மாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது குடும்பத்தினர் சேலம் அரசு மருத்துவமனை முன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து உதவி ஆணையர் ஈஸ்வரன் தலைமையிலான போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசப் பேச்சு நடத்தினர்.
 இதில், வருவாய்க் கோட்டாட்சியர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார் என போலீஸார் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
 இதுதொடர்பாக கரிஷ்மாவின் உறவினர்கள் கூறியதாவது:
 செல்வகுமார் தினமும் குடித்துவிட்டு வந்து கரிஷ்மாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் அவரைத் தாக்கியதில்தான் இறந்துவிட்டதாகத் தெரிகிறது. எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 கணவர் கைது: செல்வகுமாருக்கும் வீட்டருகே உள்ள பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதை, கரிஷ்மா, பலமுறை கண்டித்துள்ளார்.
 இதனால், அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கரிஷ்மா உயிரிழந்துள்ளார். கரிஷ்மாவின் குடும்பத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கரிஷ்மாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின்பேரில் செல்வகுமாரை ஏற்காடு போலீஸார் வழக்குப் பதிந்து திங்கள்கிழமை இரவு கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT