மேட்டூரை அடுத்த கோனூர் ஊராட்சியில் ஆண்டிக்கரை, கல்லுகிணறு, மல்லகவுண்டர் தெரு, மங்கானூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இந்தக் கிராமங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் 5 அரசுப் பேருந்துகள் இந்தக் கிராமங்களுக்கு வந்து செல்கின்றன. சாலைகள் பழுதாகி குண்டும் குழியுமாகக் காணப்படுகின்றன. இதனால் சில சமயங்களில் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. குண்டும் குழியுமான சாலைகளில் பள்ளி மாணவ மாணவியர் சைக்கிள்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்ல முடிவதில்லை. இது குறித்து பல முறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் சாலை செப்பனிடப்படவில்லை. இதனால் திங்கள் கிழமை காலை ஆண்டிகரைக்கு வந்த அரசுப் பேருந்தை கிராம மக்கள் சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேரம் போராட்டத்தால் இப் பகுதியில் போக்குவரத்துப் பாதிப்படைந்தது. தகவலறிந்து வந்த காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியப் பொறியாளர் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தி 60 நாள்களில் சாலை பணிகள் துவங்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பின்னர் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.