ஓமலூர் பேரூராட்சியில் பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகளை மழைநீரைச் சேமிக்கும் வகையில் மறுசுழற்சி மாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஓமலூர் பேரூராட்சிப் பகுதியில் சுமார் 20 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். மக்களின் குடிநீர் தேவைக்காக பல்வேறு இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள 48 ஆழ்துளைக் கிணறுகளில் 28 கிணறுகள் வற்றிவிட்டன. மேலும், பயன்பாட்டில் இருந்த ஏழு கிணறுகளில் இரண்டில் மட்டும் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மத்திய அரசின் ஜல்சக்தி சிறப்பு வல்லுநர் குழுவினர் அறிவுரைப்படி, பேரூராட்சியில் பயன்பாடின்றி உள்ள ஆழ்துளைக் கிணறுகளை மறுசுழற்சி முறையில் மழைநீரைச் சேகரிக்க மாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக ஏழு ஆழ்துளைக் கிணறுகள் மாற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் அசோக்குமார் கூறுகையில், வறட்சியை சமாளிக்க, ரூ.8 லட்சம் மதிப்பில், 14 - ஆவது வார்டு, அங்கப்பன் நகர், 10 - ஆவது வார்டு சுகந்தம் நகரில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் மின்மோட்டாருடன் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், பயன்பாடற்ற நிலையிலுள்ள ஆழ்துளை கிணறுகளை மறுசுழற்சி முறையில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.