சங்ககிரி வட்டம், கோனேரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க விற்பனை மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.30 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.
திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் கோனேரிப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க விற்பனை மைய வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் நெடுங்குளம், கல்வடங்கம், பொன்னம்பாளையம், காவேரிப்பட்டி, பூதப்பாடி, ஊமாரெட்டியூர், வெள்ளித் திருப்பூர், கோனேரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் நாமக்கல், சேலம், திருப்பூர் மாவட்ட வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 1,500 பருத்தி மூட்டைகள் 250 குழுவாகப் பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டன. இதில் பிடி ரக பருத்தி குவிண்டால் குறைந்தபட்ச விலையாக ரூ.5,780, அதிகபட்ச விலையாக ரூ.6,100 வரை ஏலம் போயின. மொத்தம் ரூ.30 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் விற்பனையாகின.