சேலம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் ஜூலை 13-இல் நடை பெறுகிறது.
இதுதொடர்பாக சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான குமரகுரு, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும் சார்பு நீதிபதியுமான சக்திவேல் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சட்டப் பணிகள் ஆணைக் குழு என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்த ஆணைக்குழுவில் உள்ள வழக்குகளை விரைவாக முடித்து கொள்ள உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி வரும் ஜூலை 13-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது. இந்த வழக்குகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வதால் யார் வென்றவர் தோற்றவர் என்ற பாகுபாடின்றி முடித்து வைக்கப்படுகிறது. இரு தரப்பினருக்கிடையே உறவுமுறை சீராக இருக்கவும் மக்கள் நீதிமன்றம் வழி செய்கிறது.
இங்கு முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்றக் கட்டணம் முழுமையாகத் திருப்பிக் கொடுக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த மக்கள் நீதிமன்றத்தையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பாகப்பிரிவினை, மோட்டார் வாகன இழப்பீடு கோரும் வழக்குகள், சிவில் வழக்குகள், சமரசம் செய்யக்கூடிய குற்ற வழக்குகள், பணப் பரிவர்த்தனை, கடனுறுதிச் சீட்டு, காசோலை, குடும்ப விவகார வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள் போன்றவற்றை மக்கள் நீதி மன்றத்தின் மூலம் தீர்த்துக் கொள்ளலாம். பொதுமக்கள் யாருக்காவது நீதிமன்றத்தில் மேற்படி வழக்குகள் நிலுவையில் இருக்கும் பட்சத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக சட்டப்படியான அறிவிப்பு இரு தரப்பினருக்கும் அனுப்பப்பட்டு சட்ட ரீதியான தீர்வு காணப்படும் என்றனர்.