சேலம்

சேலத்தில் புற்றுநோய் சிகிச்சை மையம்

4th Jul 2019 09:37 AM

ADVERTISEMENT

சேலம் தெற்கு தொகுதியில் புற்றுநோய்க்கான சிகிச்சை மையம் அமைக்க வேண்டுமென எம்.எல்.ஏ. ஏ.பி.சக்திவேலின் கோரிக்கை சட்டப்பேரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கையில், சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. ஏ.பி.சக்திவேல் பேசியது: தமிழக சட்டப்பேரவையில் 110-ஆம் விதியின் கீழ் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஜப்பான் பன்னாட்டு முகமையின் மூலம் ஒரு பல்நோக்கு மருத்துவமனை சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மணியனூரில் அமைத்துத் தருவதாக அறிவித்திருந்தார்.
இந் நிலையில், அந்த இடத்துக்குப் பதிலாக, சேலம் அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அண்ணா மருத்துவமனை வளாகத்தில் அந்த பல்நோக்கு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  அப் பணியைத் துரிதப்படுத்தி பல்நோக்கு மருத்துவமனையை விரைந்து பயன்பாட்டுக்குக் கொடுக்க வேண்டுகிறேன்.
மேலும்,  சேலம் அரசு மருத்துவமனைக்கு இணையாக பல்நோக்கு மருத்துவமனை தேவைப்படுகிறது.  அதனை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அமைக்க வேண்டும். இதில் புற்றுநோய்க்கு உண்டான சிறப்பு சிகிச்சையும் உருவாக்கித் தர வேண்டும் என்றார். 
இதற்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறுகையில், சேலத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கான மையத்தை அமைப்பது குறித்து இந்த கூட்டத்தொடரில் முதல்வர் அறிவிப்பை வெளியிடுவார். 
மேலும்,  ஜப்பான் பன்னாட்டு முகமையின் மூலம் மருத்துவமனைகள் கட்டுவதற்கான அடிப்படை வேலைகள் நடைபெற்று வருகின்றன.  இந்த கோரிக்கையும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT