சேலம்

சாலை விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: எஸ்.பி. தீபா கனிகர், உயரதிகாரிகள் கலந்தாய்வு

4th Jul 2019 09:35 AM

ADVERTISEMENT

வாழப்பாடி அருகே கார் விபத்தில் அரியலூர் பகுதியைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவ இடத்தில், சேலம் போலீஸ் எஸ்.பி. மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை மற்றும் போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் புதன்கிழமை கலந்தாய்வு செய்தனர்.  
சேலம் மாவட்டம்,  வாழப்பாடி அருகே செவ்வாய்க்கிழமை நண்பகல் 2 மணியளவில் கட்டுப்பாடிழந்து நிலைதடுமாறிய கார்,  சாலைத் தடுப்பின் மீது ஏறி எதிரே சென்ற லாரி மீது மோதி தலைக்குப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்தில், அரியலூரை அடுத்த வரதராஜன்பேட்டை ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த பவுல்ராஜின்  மனைவி  ராதிகாமேரி (38),  நண்பர்கள் சின்னப்பராஜ் (38), ராஜன் (30), ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  படுகாயடைந்த பவுல்ராஜ் (43) சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து,  விபத்து நிகழ்ந்த பகுதிக்கு புதன்கிழமை காலை சேலம் போலீஸ் எஸ்.பி. தீபா கனிகர்,  கூடுதல் எஸ்.பி. அன்பு, வாழப்பாடி டி.எஸ்.பி. சூர்யமூர்த்தி, காவல் ஆய்வாளர் சுப்பிரமணி மற்றும் ஆத்தூர் வட்டாரப் போக்குரவத்து அலுவலர் ஜெயகௌரி,  வாழப்பாடி மோட்டார் வாகன ஆய்வாளர் தனபால், வாழப்பாடி வட்டாட்சியர் ஜாஹீர் உசேன் மற்றும் சேலம் கோட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறை உயரதிகாரிகள், மேட்டுப்பட்டி சுங்கச் சாவடி அலுவலர்கள் ஆகியோர் கலந்தாய்வு செய்தனர்.
இப் பகுதியில் வருங்காலங்களில் விபத்து நிகழாமல் இருக்க சாலை வேகத் தடுப்புத் தட்டிகள் வைக்கவும், சாலை தடுப்புகளில் ஒளிரும் விளக்குகள் மற்றும் வண்ணங்களை பூசவும் முடிவு செய்தனர். 
தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை ஓட்டுவதற்கு முறையாக பயிற்சியும்,  போதிய அனுபவமும் இல்லாமலும், மது அருந்தியபடியும், புதிதாக சொந்தமாக கார் வாங்கி ஓட்டுபவர்களுமே அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.  எனவே, தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டும் போது, சாலை விதிமுறைகளை  முறையாக கடைப்பிடித்து குறிப்பிட்ட வேகத்துக்குள் செல்ல வேண்டுமென,  போக்குவரத்துத் துறையினரும், போலீஸாரும் வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT