சேலம்

இருவழி புறவழிச் சாலைகளை 4 வழிச் சாலையாக தரம் உயர்த்தக் கோரிக்கை

4th Jul 2019 09:35 AM

ADVERTISEMENT

போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளும், உயிர்பலியும் தொடர்வதால், இச்சாலையை 4 வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையையும் சேலத்தையும் இணைக்கும் சேலம்-உளுந்தூர்பேட்டை இடையிலான 136 கி.மீ. மாநில இருவழிச் சாலையை, நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்ததால், கடந்த 2008-இல் ரூ.941 கோடியில் நான்கு வழிச்சாலையாக்கும் பணியை மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் தொடங்கியது.
சாலையை கட்டமைக்கும் பணி, பராமரிப்பு மற்றும் இத்திட்டத்துக்கான செலவுகளை திரும்பப் பெறுவதற்கான சுங்கம் வசூலிக்கும் உரிமம் ஆகியவை பிரபல தனியார் நிறுவனத்தின் பொறுப்பில் விடப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு பிறகு பணிகள் முடிக்கப்பட்டு 2013-இல் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து  தொடங்கியது.
இச்சாலையில் சேலம் உடையாப்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், எலவனாசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை ஆகிய 8 இடங்களில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இச்சாலைகள் அனைத்தும் இருவழிச் சாலையாகவே அமைக்கப்பட்டுள்ளன. 
இருவழிச் சாலைகள் அகலம் குறைவாக அபாயகரமான வளைவுகளுடன் அமைந்துள்ளன. கடந்த 6 ஆண்டுகளில் வாகனப் போக்குவரத்து இரு மடங்காக உயர்ந்துள்ள நிலையில், இருவழி புறவழிச் சாலையில் நாளுக்குநாள் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. 
தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்துக்கு முன்வரைவு தயாரிக்கும் போதே 136 கி.மீ. தொலைவுக்கும் நான்குவழி சாலை அமைக்க திட்டமிடாமல், புறவழிச் சாலைகளை இருவழிச் சாலையாக அமைத்ததால், தற்போது கடுமையான போக்குவரத்து  நெரிசலும், விபத்துகளும் உயிர்பலியும் ஏற்பட்டு வருகின்றன. பாலங்கள் அமைந்துள்ள பகுதியில் இருசக்கர வாகனங்கள் கூட ஒதுங்கி செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி, போதிய எச்சரிக்கை பதாகைகள், சாலையோர மின்விளக்குகள் மற்றும் இரவில் ஒளிரும் சாலையொட்டிகள் அமைக்கப்படாததால், கடந்த 6 ஆண்டுகளில் சேலம்-உளுந்தூர்பேட்டை இருவழி புறவழிச் சாலைகளில் நிகழ்ந்த விபத்துகளில் இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் விபத்தில் படுகாயமடைந்தும்,  உடலுறுப்புகளை இழந்தும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகள் மற்றும் உயிர்பலியைத் தவிர்க்க, 8 இடங்களில்  37 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள  இருவழி புறவழிச் சாலைகளை, நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT