சேலம்

சேலம் ஆட்சியராக சி.அ. ராமன் பொறுப்பேற்பு

2nd Jul 2019 08:19 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்ட ஆட்சியராக சி.அ. ராமன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
சேலம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்த ரோகிணி ராம்தாஸ், சென்னையில் தமிழ்நாடு இசை கல்லூரி பதிவாளராக இடம் மாற்றம் செய்யப்பட்டார். கடந்த 2017 ஆகஸ்ட் 28 ஆம் தேதி பொறுப்பேற்ற ரோகிணி ராம்தாஸ், சேலம் மாவட்டத்தில் முதல் பெண் ஆட்சியர் என்ற சிறப்பைப் பெற்றவர்.
இந்த நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பு வகித்து வந்த சி.அ. ராமன், சேலம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, சேலம் மாவட்டத்தின் 172-ஆவது ஆட்சியராக அவர் திங்கள்கிழமை காலை பொறுப்பேற்றுக் கொண்டார். 
அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆட்சியர் சி.அ. ராமன் மனுக்களைப் பெற்றார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் பிறந்த சி.அ. ராமன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் வேளாண்மை பாடப்பிரிவில் இளங்கலை பட்டமும், மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். 
இவர் 2002-ஆல் மதுரையில் துணை ஆட்சியராக (பயிற்சி) பணியில் சேர்ந்தார். 2008-இல் முசிறியில் வருவாய்க் கோட்டாட்சியராகப் பொறுப்பு வகித்தார். மன்னார்குடியில் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றிய பின், சென்னை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பொது மேலாளர் (நிர்வாகம்), ஆவின் இணை மேலாண்மை இயக்குநர் மற்றும் முதல்வர் அலுவலகத்தில் துணைச் செயலாளராகவும் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
பின்னர் 2015-இல்  இந்திய ஆட்சிப்பணியில் பதவி உயர்வு பெற்றார். தொடர்ந்து இந்திய ஆட்சிப் பணி அந்தஸ்தில் சென்னை நிலநிர்வாக இணை ஆணையராகவும், 2016 முதல் 2019 ஜூன் 30 வரை வேலூர் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது சேலம் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT