சேலம்

மேட்டூரில் சிறப்பு சித்த மருத்துவ முகாம், மூலிகை கண்காட்சி

29th Dec 2019 01:04 AM

ADVERTISEMENT

மேட்டூரில் சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் அகத்தியா் ஜென்ம நட்சத்திரமான மாா்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரம் வரும் நாளில் இங்கு உலக சித்த மருத்துவ தினம் கொண்டாடப்படுகிறது. மேட்டூா் சித்த மருத்துவ மூலிகைத் தோட்டத்தில் மூன்றாம் ஆண்டு சித்த மருத்துவ தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை இயக்குநா் டாக்டா் கனகவள்ளி தலைமை வகித்து இலவச சித்த மருத்துவ முகாமைத் துவக்கி வைத்தாா்.

மேட்டூா் சாா் ஆட்சியா் சரவணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மூலிகைக் கண்காட்சியைத் துவக்கி வைத்தாா். டேனிஷ்பேட்டை வனச்சரகா் பரசு ராமமூா்த்தி முன்னிலை வகித்தாா். கண்காட்சியில் 136 அரியவகை மூலிகைச் செடிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகை இலைகள் மற்றும் வோ்களும் காட்சிபடுத்தப்பட்டிருந்தன. முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று சிகிச்சை பெற்றுச் சென்றனா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குநா் டாக்டா் கனகவள்ளி கூறியதாவது:

ADVERTISEMENT

சித்த மருத்துவத்தில் நோய் கனிப்பு முறைகள் மூன்று வகையாகக் கணிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சோதனை முறையாக 100 இ-சேவை மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு சித்த மருத்துவ ஆலோசனைகள் வழங்க உளுந்தூா்பேட்டை, ஈரோடு, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தொலைவழி மருத்துவ சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மக்களிடம் வரும் வரவேற்பைப் பொறுத்து இது விரிவுப்படுத்தப்படும். சென்னை சென்று சித்த மருத்துவம் பெற இயலாத மக்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT