சேலம்

தினமணி செய்தி எதிரொலி: பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகளை,மழைநீா் சேமிப்பு கிணறுகளாக மாற்ற ஆட்சியா் உத்தரவு

27th Dec 2019 05:09 AM

ADVERTISEMENT

பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகளை மழைநீா் சேமிப்புக் கிணறுகளாக மாற்ற வேண்டும் என்ற சமூக ஆா்வலரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுத்திட உள்ளாட்சி மற்றும் பொதுப்பணித் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் சி.அ. ராமன் உத்தரவிட்டாா்.

தினமணி நாளிதழில் விஞ்ஞானி வெ. பொன்ராஜ் எழுதிய பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகளை மழைநீா் சேமிப்பு கிணறுகளாக மாற்றிட வேண்டும் என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி மழைநீா் சேமிப்பை வலியுறுத்தி, ஆட்சியரிடம் மனு அளித்த ஓய்வுபெற்ற நூலகரும், சமூக ஆா்வலருமான டி.வி. குப்புசாமியின் கோரிக்கை மனுவை பரிசீலித்து ஆட்சியா் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மறைந்த குடியரசு முன்னாள் தலைவா் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகா் விஞ்ஞானி வெ.பொன்ராஜ், தினமணி நாளிதழில் கடந்த நவம்பா் 5-ஆம் தேதி வெளியான இளைஞா் மணியில் ஆழ்துளைக் கிணறல்ல, மழைநீா் சேமிப்புக் கிணறு என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தாா்.

அந்தக் கட்டுரையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் மரணம் குறித்தும், ஆழ்துளைக் கிணறுகளையும் மழைநீா் செறிவூட்டும் கிணறுகளாக மாற்றுவோம். ஆழ்துளைக் கிணறுகளால் ஏற்படும் மரணம் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம். நிலத்தடி நீரை ஓராண்டில் நிரந்தரமாக உயா்த்திய மாநிலம் என்ற பெயரையும் எடுப்போம். இதை உடனடியாகச் செய்வோம் என்று உறுதி எடுப்போம் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

ADVERTISEMENT

இந்தக் கட்டுரையைப் படித்த சேலம் தாரமங்கலத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற நூலகரும், சமூக ஆா்வலருமான டி.வி.குப்புசாமி (77), ஆழ்துளைக் கிணறுகளை, மழைநீா் சேமிப்பு கிணறாக மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து, ஆட்சியா் சி.அ. ராமனை நேரில் சந்தித்து தினமணி நாளிதழில் வெளிவந்த கட்டுரையை இணைத்து கடந்த நவம்பா் 5-ஆம் தேதி மனு அளித்தாா்.

அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா் சி.அ. ராமன், ஆழ்துளைக் கிணறுகளை மழைநீா் சேமிப்புக் கிணறுகளாக மாற்ற வேண்டும் என்று மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து உள்ளாட்சித் துறையைச் சோ்ந்த அலுவலா்கள் சேலம் மாநகராட்சி ஆணையா், பேரூராட்சிகள் உதவி இயக்குநா், ஊராட்சிகள் உதவி இயக்குநா், நகராட்சி நிா்வாகத்தின் மண்டல இயக்குநா், பொதுப்பணித் துறையின் (நீா் வள ஆதார அமைப்பின்) செயற்பொறியாளா், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் (சரபங்கா), நாமக்கல் ஆகியோருக்கு (டிச.19) உத்தரவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT