ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வாக்குப் பதிவு நாளில் கடைகள், நிறுவனங்கள் தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) பா.கோட்டீஸ்வரி தெரிவித்துள்ளாா்.
ஊரக உள்ளாட்சித் தோ்தல் டிச. 27 மற்றும் டிச. 30 ஆகியதேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையொட்டி கடைகள், நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் வாக்களிக்க ஏதுவாக அந்தந்த தேதியில் அந்தந்தப் பகுதியில் உள்ள நிறுவனங்கள் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994 பிரிவு 80 ஏ-இன்படி, சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.
எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் உள்பட அனைத்து வேலையளிப்பவா்களும் தங்களது தொழிலாளா்களுக்கு (ஒப்பந்த, தினக்கூலி தொழிலாளா்கள் உள்பட) அந்தந்தப் பகுதியில் தோ்தல் நடைபெறும் நாளில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.
விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடா்பான புகாா்களை 9445398749, 9443580053, 9442738822 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்.