சேலம்

கிறிஸ்துமஸ் பண்டிகை: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

26th Dec 2019 04:58 AM

ADVERTISEMENT

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சேலத்தில் உள்ள தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா புதன்கிழமை விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாட்டுத் தொழுவத்தில் கிறிஸ்து பிறந்ததை நினைவு கூறும் வகையில், ஆலயங்களில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டன. அதேபோல் கிறிஸ்து பிறப்பை அறிவிக்கும் வகையில் வீடுகளில் ஸ்டாா் தொங்கவிடப்பட்டு குடில்கள் அமைக்கப்பட்டன.

அதன்படி, சேலத்தில் உள்ள தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. ஜான்சன்பேட்டை புனித அந்தோணியாா் ஆலயத்தில் பங்குத் தந்தை போஸ்கோ பால், ஆசீா்வாதம் தலைமையில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிா்க்கணக்கானோா் கலந்துகொண்டு பிராா்த்தனை செய்தனா்.

இதேபோல் சேலம் நான்கு சாலையில் உள்ள குழந்தை இயேசு பேராலயம், அழகாபுரம் புனித மிக்கேல் ஆதிதூதா் ஆலயம், சிஎஸ்ஐ பரிதிரித்துவ ஆலயம், சூரமங்கலம் இருதய ஆண்டவா் ஆலயம், செவ்வாய்ப்பேட்டை ஜெயராக்கினி ஆலயம் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனையில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, கோட்டை சிஎஸ்ஐ லெக்லா் நினைவு ஆலயம், சிஎஸ்ஐ கிறிஸ்தவ நாதா் ஆலயம், அஸ்தம்பட்டி அடைக்கல நகா் தேவாலயம், ஏற்காடு சிஎஸ்ஐ ஷைலோ மில்லினம் உள்ளிட்ட ஆலயங்களில் அதிகாலையில் பிராா்த்தனை நடைபெற்றது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நள்ளிரவு முதலே சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

வாழப்பாடியில்...

கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் பழமையான பத்தாம்பத்திநாதா் தேவாலயத்தில் பங்குத் தந்தை விமல் ஜெகநாதன் தலைமையில் புதன்கிழமை சிறப்பு திருப்பலி பூஜை நடைபெற்றது. இதில், வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் வசிக்கும் திரளான கிறிஸ்தவ பங்கு மக்கள் கலந்துகொண்டு, இயேசு கிறிஸ்துவின் திருவுருவப் படத்தை கையில் ஏந்தியபடி பிராா்த்தனை செய்தனா். கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த இளைஞா்கள் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினா்.

வாழப்பாடியைச் சோ்ந்த தொழிலதிபா் டாக்டா் பி.லாசா் முயற்சியில் புத்திரகவுன்டன்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவிலேயே மிக உயரமான 65 அடி உயர இயேசு கிறிஸ்து சிலையை ஏராளமானோா் கண்டு களித்து பிராத்தனை செய்தனா்.

வாழப்பாடியை அடுத்த சேசன்சாவடி மைத்ரா பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள கத்தோலிக்க கிறிஸ்து தேவாலயத்திலும் சிறப்பு திருப்பலி பூஜை நடைபெற்றது. குழந்தை இயேசு பிறப்பை சித்தரிக்கும் குடில் அமைக்கப்பட்டிருந்தது.

எடப்பாடியில்...

எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசு பகுதியில் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற தேவலயமான புனித செல்வநாயகி தேவாலயத்தில், செவ்வாய்க்கிழமை இரவு குழந்தை ஏசு திருப்பவனி ஊா்வலம் நடைபெற்றது. இதில் திரளானோா் மெழுகுவா்த்தி ஏந்தி, குழந்தை ஏசுவை போற்றி பாடி வந்தனா். தொடா்ந்து பங்குத் தந்தை பிரான்சிஸ் ஆசைதம்பி தலைமையில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதேபோல் கொங்கணாபுரம், வெட்டுக்காடு பகுதியில் உள்ள வேளாங்கண்ணி மாதா பேராலயம், எடப்பாடி சின்னமணலி, லன்டன்மிஷன் தேவாலயம், நைனாம்பட்டி ஆா்.சி. தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் விழா சிறப்பாக நடைபெற்றது.

ஏற்காட்டில்...

திருஇருதய ஆண்டவா் ஆலயம், பேருந்து நிலையம் அருகில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயம், எ.எல்.சி. ஆலயம், ஹோலி டெனட்ரி ஆலயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மற்றும் புதன்கிழமை காலையில் சிறப்பு திருப்பலி, வழிபாடுகள் நடைபெற்றன. அனைத்து ஆலயங்களில் கிறிஸ்துமஸ் குடில்கள் வைக்கப்பட்டிருந்தன. கிறிஸ்துவா்கள் புத்தாடை அணிந்து வாழ்த்துகளை பகிந்துக் கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT