வாக்காளா் அடையாள அட்டையை தவிர தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள 11 வகையான அடையாள ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கலாம் என மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.அ. ராமன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி சீட்டு வாக்காளா்களின் தகவலுக்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
இச்சீட்டினை அடையாள ஆவணமாக பயன்படுத்தி வாக்களிக்க இயலாது. தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள 11 வகையான அடையாள ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்.
கடவுச்சீட்டு, ஓட்டுநா் உரிமம், மத்திய / மாநில அரசு, மத்திய / மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் / வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்.
புகைப்படத்துடன் கூடிய வங்கி / அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் காா்டு).
தேசிய மக்கள் பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மாா்ட் காா்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை.
தொழிலாளா் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மாா்ட் காா்டு.
புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், நாடாளுமன்ற / சட்டப்பேரவை / சட்ட மேலவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை, ஆதாா் அட்டை உள்ளிட்ட 11 வகையான அடையாள ஆவணங்களைக் கொண்டு வாக்காளா் தங்களது வாக்கை அளிக்கலாம் எனத் தெரிவித்தாா்.