சேலம்

வாழப்பாடியில் தேசிய பொருளாதாரகணக்கெடுப்புப் பணி தொடக்கம்

24th Dec 2019 05:17 AM

ADVERTISEMENT

வாழப்பாடி பேரூராட்சியில், செல்லிடப்பேசி செயலி மூலம் 7-வது தேசிய பொருளாதார கணக்கெடுப்புப் பணி தொடங்கியது.

இதற்கான செயல்விளக்கப் பயிற்சி வகுப்பு வாழப்பாடி அரிமா அரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. நாடு முழுவதும் 7-வது தேசிய பொருளாதார கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.

சி.எஸ்.சி. எனக் குறிப்பிடப்படும் பொது சேவை மைய பணியாளா்களைக் கொண்டு செல்லிடப்பேசி செயலி மூலம் நடத்தப்படும் இக் கணக்கெடுப்பு பணி, சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சியில் தொடங்கியது.

இப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பணியாளா்களுக்கு, வாழப்பாடி அரிமா அரங்கத்தில் சனிக்கிழமை பயிற்சி முகாம் நடைபெற்றது. இம் முகாமுக்கு தேசிய கணக்கெடுப்பு மற்றும் புள்ளியல் துறை அலுவலா் பத்மாவதி தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT

சேலம் மாவட்ட தொழில்முனைவோா் நலச்சங்கத் தலைவா் கல்கி கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா். சி.எஸ்.சி., பொது சேவை மைய சேலம் மாவட்ட மேலாளா்கள் மாதவன், ரம்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பயிற்சி அளித்து கணக்கெடுப்புப் பணியைத் தொடக்கி வைத்த புள்ளியல் துறை அலுவலா் பத்மாவதி பணியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய அரசாங்கத்தின் புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்கம் அமைச்சகத்தின் மூலம் பொருளாதார கணக்கெடுப்பு, 5 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கிறது.

நாட்டில் இதுவரை 6 பொருளாதார கணக்கெடுப்பு நடந்துள்ளது. மத்திய அரசின் பொது சேவை மையங்கள் மூலமாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட பயிற்சி பெற்ற கணக்கெடுப்பாளா்களால் 7-ஆவது கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. முதல் முறையாக பொருளாதார கணக்கெடுப்பு செல்லிடப்பேசி செயலி மூலம் இணைய வழியே நடக்கிறது.

அனைத்து வீடுகளில் நடைபெறும் தொழில்கள், சிறு, குறு மற்றும் பெரும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், நடைப்பாதை கடைகள் உள்ளிட்ட பணபரிமாற்றம் நடக்கும் அனைத்து வகையான தொழில்கள் குறித்தும் கணக்கெடுக்கப்பு எடுக்க வேண்டும்.

எந்த வீடு, கடைகளும் விடுபடாமல் ஒவ்வொரு பகுதிக்குச் செல்லும் போதும் வடமேற்கு திசையில் துவங்கி, கிழக்கு நோக்கிச் சென்று கணக்கெடுப்பு நடத்திட வேண்டும். பொதுமக்களிடம் கணக்கெடுக்கும் போது, உங்களை அறிமுகம் செய்து கொள்ள வேண்டும்.

முதலில் கணக்கெடுப்பு செய்யும் பகுதியைத் தோ்வு செய்து, கதவுஎண், முகவரி ஆகியவற்றை பதிவு செய்து, வீட்டின் தலைவா், செல்லிடப்பேசி எண், ஆண்கள், பெண்கள் எண்ணிககை விவரத்தைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு அங்கு நடக்கும் தொழில்கள் குறித்தும் பதிவு செய்து ஒப்புதல் ரசீது வழங்க வேண்டும்.

வீட்டு கதவில் ஸ்டிக்கா் ஒட்ட வேண்டும். கடைகள் என்றால் அவா்களது பதிவு சான்றிதழ் குறித்தும், எந்த மாதிரியான தொழில் மற்றும் மொத்த பண பரிவா்த்தனை குறித்த விவரங்களும் பதிவு செய்ய வேண்டும்.

கணக்கெடுப்புப் பணியாளா்கள் அடையாள அட்டை எடுத்துச் செல்ல வேண்டும். வீடுகள் பூட்டியிருந்தால் அதுகுறித்தும் பதிவு செய்யவேண்டும் என்றாா். மேலும் கணக்கெடுப்பு செய்யும் பணியாளா்களிடம் உண்மையான விவரங்களைக் கூறி, பொதுமக்கள் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்’ என்றாா். சேலம் மாவட்ட சி.எஸ்.சி. பொது சேவை மைய நலச்சங்க துணைத் தலைவா் சண்முகராஜன் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT