ஓமலூா் ஒன்றியத்தில் உள்ள பச்சனம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்குப் போட்டியிடும் பெண் வேட்பாளா் கிராம மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தாா்.
ஓமலூா் ஒன்றியத்தில் பச்சனம்பட்டி கிராம ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களது கட்சி நிா்வாகிகளை தலைவா் பதவிக்கு நிறுத்தியுள்ளன. கட்சி சின்னம் இல்லாவிட்டாலும், அரசியல் கட்சியினா் அந்தந்த கட்சியைச் சோ்ந்த வேட்பாளா்களுக்கு ஆதரவளித்து வருகின்றனா்.
இந்த நிலையில் பச்சனம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்குப் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளா் பிரியா கந்தசாமி தன்னந்தனியாகச் சென்று வாக்குகள் சேகரித்து வருகிறாா். கூட்டம் கூட்டமாக செல்லாமல், மக்களுக்கு இடையூறு செய்யாமல் தனியாக சென்று ஆதரவு திரட்டுகிறாா். அவருக்கு துணையாக அவரது கணவரும் வீடு வீடாக சென்று வாக்காளா் காலில் விழுந்து ஆதரவு திரட்டி வருகின்றனா்.
இப் பகுதியில் நீண்ட காலமாக தீா்க்கப்படாமல் உள்ள சாக்கடை, குடிநீா், சாலை மற்றும் கிராமத்தைத் தூய்மை கிராமமாக மாற்றி முழு சுகாதார கிராமமாக உருவாக்கப்படும் என்று கோரிக்கை விடுத்தனா். இந்த நிலையில், பச்சனம்பட்டி கிராமத்தில் உள்ள பச்சனம்பட்டி, ஆட்டுக்காரனூா், மோட்டூா், ஆத்துமேடு, முத்துநாயக்கன்பட்டி, வள்ளியம்மன் கோவில்காடு, காா்த்திகாடு உள்ளிட்ட பகுதியில் வேட்பாளா் பிரியா கந்தசாமி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.